கன்னியாகுமரி

கால்வாய் மடையில் தண்ணீர் திறக்க அதிகாரிகள் தயக்கம்: சுசீந்திரம் பகுதியில் 800 ஏக்கர் நெல்பயிர்கள் கருகும் அபாயம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னிப்பூ சாகுபடிக்காக பேச்சிப்பாறை  அணை திறந்து 20 நாள்களாகியும்,

பி.எஸ்.மீனாட்சிசுந்தரம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னிப்பூ சாகுபடிக்காக பேச்சிப்பாறை  அணை திறந்து 20 நாள்களாகியும், சுசீந்திரம் பகுதிகளில் கால்வாய் மடைகள்  திறக்கப்படாததால், 800 ஏக்கர் நெல்பயிர்கள் கருகும் அபாயத்தில் உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.
குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ நெல் சாகுபடிக்காக பேச்சிப்பாறை அணை ஜூன் 1ஆம் தேதி திறக்கப்படுவது வழக்கம். நிகழாண்டு போதிய பருவ மழை இல்லாததாலும், அணைகளில் நீர்மட்டம் குறைந்து காணப்பட்டதாலும் பேச்சிப்பாறை அணை ஜூன் 28  ஆம் தேதிதான் திறக்கப்பட்டது. இந்தத் தண்ணீர்  தோவாளை, அனந்தனாறு கால்வாய்கள் மூலம் வயல் பகுதிகளுக்கு செல்கிறது. 
இந்நிலையில் பேச்சிப்பாறை அணை தண்ணீர் திறக்கப்பட்டு 20 நாள்கள் ஆன நிலையிலும் கால்வாய்கள் தூர் வாரப்படாத காரணத்தால் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளுக்கும் தண்ணீர் வந்து சேரவில்லை. இதனால் பெரும்பாலான இடங்களில் விவசாயிகள் முதல்கட்ட சாகுபடி பணிகளை முடித்து விவசாயத்திற்கு தண்ணீர் இல்லாமல் தவிக்கின்றனர். 
பேச்சிப்பாறை அணையிலிருந்து நாகர்கோவில் அருகேயுள்ள சோழன்திட்டை தடுப்பணைக்கு தண்ணீர் வந்தும் கூட அதன் அருகிலுள்ள சுசீந்திரம்  பகுதிகளில் உள்ள கால்வாய் மடைகளை அதிகாரிகள் திறக்காமல்  வேறு பகுதிகளுக்கு தண்ணீர் வழங்கி  வருவதால் இப் பகுதிகளில் உள்ள  800 ஏக்கர் நெல்பயிர்கள் கருகி வருவதாக இப்பகுதி விவசாயிகள்கவலை தெரிவித்தனர்.
கடனாளிகளாகும் விவசாயிகள்: இதுகுறித்து சுசீந்திரம் பகுதி விவசாய சங்கத் தலைவர் கண்ணன் கூறியது: நிகழாண்டில் அணைகள் திறக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டதால் கன்னிப்பூ பருவ சாகுபடி பணிகள் மிகவும் மந்த கதியிலேயே நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்து வருவதால் குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ பருவ சாகுபடி பரப்பு குறைந்து வருகிறது.
இந்நிலையில், அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கால்வாய்களுக்கு சென்று சேரும் வகையிலும்,  தண்ணீர் எல்லா பகுதிகளுக்கும் கிடைக்கும் வகையிலும் அதிகாரிகள் செயல்பட வேண்டும். ஆனால், அவ்வாறு செயல்படத் தவறினால் தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டு, நடவு செய்த பயிரை காப்பாற்ற முடியாமல் விவசாயிகள் கடனாளிகளாவர் என்றார் அவர்.
ஆக்கிரமிப்புகளே காரணம்: இது குறித்து பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் (நீர்ஆதாரம்) வேத அருள்சேகர் அளித்த பதில்: சுசீந்திரம் பகுதியில் மேற்குறிப்பிட்ட மடையில் தண்ணீர் திறந்து விடப்பட்டாலும், ஆக்கிரமிப்பு காரணமாக தண்ணீர் வயலுக்குச் சென்று சேர்வதில்லை. எனவே, முதலில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும். அதற்கு பேரூராட்சிஅதிகாரிகள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டால், தண்ணீர் திறப்பதில் எந்தப் பிரச்னையும் இல்லை என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திண்டல் வேலாயுதசுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம்

Nanjil Sampath Latest Interview | சீமான் தமிழரே இல்லை | TVK Vijay | Seeman | NTK Maanadu

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம்?

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு

SCROLL FOR NEXT