கன்னியாகுமரி

பேச்சிப்பாறை "சீரோ பாயின்ட்' மக்களுக்கு மாற்று இடம் கையகப்படுத்தும் பணி தொடக்கம்

DIN

கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை சீரோ பாயின்ட் பகுதியில் இருந்து அப்புறப்படுத்தவுள்ள குடும்பங்களுக்கு சமத்துவபுரம் அருகே மாற்று நிலம் வழங்கும் வகையில் நிலம் கையகப்படுத்தும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரதான அணையான பேச்சிப்பாறை அணையில் ரூ. 61.30 கோடி மதிப்பில் புனரமைப்பு 
பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், அணையில் கூடுதலாக 8 மறுகால் மதகுகள் அமைக்கப்பட்டன. இந்த மதகுகள் வழியாக வெளியேறும் உபரி நீர் பாய்ந்து செல்லும் பகுதியிலுள்ள 46 வீடுகளை அகற்ற பொதுப்பணித்துறை முடிவு செய்து ஆட்சியருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. 
மாற்று இடம்: இந்நிலையில் சீரோ பாயின்ட் பகுதியில் குடியிருந்து வரும் 46 வீடுகளில் வசிப்பவர்களுக்கு மாற்று இடமாக பேச்சிப்பாறை சமத்துவபுரத்தின் பின்பகுதியில் நத்தம் புறம்போக்கு நிலத்தில் குடியிருந்து வருவோர் வீடுகள் அமைந்துள்ள பகுதியில் நிலம் கையகப்படுத்தி வழங்க வருவாய்த்துறை முடிவு செய்துள்ளது.  இதற்கு சீரோ பாயின்ட் பகுதியில் வசிப்போர் ஆட்சேபம் தெரிவித்ததுடன், தங்களுக்கு சரியான மாற்று இடம் வேண்டும் எனவலியுறுத்தினர். சமத்துவபுரம் அருகே குடியிருப்போரும் தங்களது வீடுகளைச் சுற்றியிருக்கும் நிலத்தை கையகப்படுத்த ஆட்சேபம் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக, மனோ தங்கராஜ் எம்.எல்.ஏ., அரசியில் கட்சியினர் இரு தரப்பினரும் பாதிக்காத வகையில் மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பத்மநாபபுரம் சார்-ஆட்சியர் சரண்யா அரியிடம் வலியுறுத்தினர்.  இதுகுறித்து பேச்சுவார்த்தையும் நடைபெற்றது.
நிலம் கையகப்படுத்தல்: இந்நிலையில் திங்கள்கிழமை காலையில் சார்-ஆட்சியர் மற்றும் தக்கலை டிஎஸ்பி கார்த்திகேயன், திருவட்டாறு வட்டாட்சியர் சுப்பிரமணியன், பொதுப்பணித்துறை உதவிப்பொறியாளர் லூயிஸ் அருள்செழியன் மற்றும்  போலீஸார் சமத்துவபுரம் அருகில் நிலம் கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். 
இதுகுறித்து, பேச்சிப்பாறை ஊராட்சி முன்னாள் தலைவர் எஸ். ராஜன் கூறியது: சீரோ பாயின்ட்  பகுதியில் மக்கள் 50 ஆண்டுகளுக்கு மேலாக அங்கு வசித்து வருகின்றனர். சிலர் தங்களின் உழைப்பு மூலம்  கான்கிரீட் வீடுகள் கட்டியுள்ளனர்.
அவர்களுக்கு சரியான மாற்று இடம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். ஆனால், சரியான மாற்று இடம் அளிக்காமல் சமத்துவபுரம் அருகில் குறைந்த பரப்பு உள்ள நிலத்தில் வசிப்போர் வீடுகளின்  அருகில் சீரோ பாயின்ட்  பகுதி மக்களை குடியமர்த்த வருவாய்த்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இதனால் இரு தரப்பினர் இடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது  என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

SCROLL FOR NEXT