நாகர்கோவில் நகரின் குடிநீர் ஆதாரமான முக்கடல் அணை தொடர்ந்து மைனஸ் அளவில் உள்ளதாலும், கோடை மழை பொய்த்ததாலும் நாகர்கோவில் நகரில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இம்மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை, வடகிழக்குப் பருவமழை என இரு பருவ மழை மற்றும் கோடை மழை என 3 பருவங்களில் மழை பெய்யும். இதனால் இங்கு குடிநீர்ப் பிரச்னை ஏற்படுவது இல்லை. ஆனால் நிகழாண்டு குமரி மாவட்டத்தில் வழக்கமாக பெய்யும் பருவமழை சரிவர பெய்யவில்லை. கோடை மழையும் இல்லை.
மாவட்டத்தின் நீர் ஆதாரங்களாக விளங்கும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் குறைந்தளவே நீர் இருப்பு உள்ளது. பேச்சிப்பாறை அணையில் கடந்த ஆண்டு முதல் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், அதிகளவு நீர் தேக்க முடியவில்லை.
இருப்பினும் 18 அடி வரை மட்டும் நீரை சேமிக்கலாம் என்றபோதும் மழை இல்லாததால் 3 அடி மட்டுமே தண்ணீர் உள்ளது. மேலும், பெரும்பாலான பாசனக் குளங்கள் வறண்டுவிட்டன. இதனால் நிகழாண்டு கன்னிப்பூ சாகுபடி மேற்கொள்வது கேள்விக்குறியாகி வருகிறது. வழக்கமாக சாகுபடிக்காக ஜூன் 1ஆம் தேதி திறக்கப்படவேண்டிய அணைகள், போதிய நீர் இருப்பு இல்லாததால் திறக்கப்படவில்லை.
நாகர்கோவில் நகரின் குடிநீர் ஆதாரமாக விளங்கி வரும் முக்கடல் அணை, கடந்த ஒரு மாதமாக மைனஸ் அளவிலேயே உள்ளது. முக்கடல் அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி மைனஸ் 17.40 அடியாக உள்ளது. பொதுவாக முக்கடல் அணை மைனஸ் அளவை எட்டிய சில நாள்களிலேயே மழை பெய்து பிளஸ் அளவுக்கு மாறும். ஆனால் நிகழாண்டு இதுவரை கோடை மழை சிறிதளவுகூட பெய்யாததால் முக்கடல் அணை மைனஸ் அளவிலேயே நீடிக்கிறது.
நாகர்கோவில் நகரில் தற்போது 10 முதல் 15 நாள்களுக்கு ஒரு முறைதான் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. அதிலும் குறைந்தளவு மட்டுமே விடப்படுவதால் பொதுமக்களுக்கு போதுமானதாக இல்லை. நகரின் பல பகுதிகளில் குடிநீருக்காக மக்கள் லாரியை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலை உள்ளது. தற்போதைய நிலையில் நாகர்கோவில் நகரில் ஆழ்துளைக் கிணறு மூலம் கிடைக்கும் தண்ணீர்தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், பேச்சிப்பாறை அணையிலிருந்து நாகர்கோவில் நகரின் குடிநீர்த் தேவைக்காக 75 கன அடி நீர் வழங்கப்பட்டு வருகிறது. இது எத்தனை நாள்களுக்கு வரும் என்று கணக்கிட முடியாத நிலை உள்ளது.
தென்மேற்குப் பருவமழை ஜூன் மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த மழை கை கொடுத்தால்தான் இம்மாவட்டத்தில் குடிநீர்ப் பிரச்னையை தீர்க்க முடியும்.
இங்கு நிலவும் குடிநீர்ப் பிரச்னை குறித்து, நாகர்கோவில் மாநகராட்சி பொறியாளர் பாலசுப்பிரமணியன் கூறியது: நாகர்கோவில் நகர குடிநீர்த் தேவைக்காக தினமும் பேச்சிப்பாறை அணையில் இருந்து 150 கன அடி நீர் அளிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தோம். ஆனால் தற்போது அணையில் குறைந்தளவே நீர் இருப்பதால் தினமும் 75 கன அடி நீர் விநியோகித்து வருகின்றனர்.
பேச்சிப்பாறை அணையிலிருந்து முக்கடலுக்கு வரும் தண்ணீரை இடை வழியில் சிலர் முறைகேடாக மோட்டார் மூலம் உறிஞ்சி எடுத்து வந்தனர். இதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, தற்போது மாநகராட்சி பணியாளர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
எனவே, இந்த தண்ணீரே தற்போது போதுமான அளவு உள்ளது. இருந்தாலும் பொதுமக்கள் குடிநீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். மேலும், முக்கடல் அணையிலிருந்து கிருஷ்ணன்கோவில் நீரேற்று நிலையத்துக்கு வரும் வழியில் இறச்சகுளம், நாவல்காடு பகுதிகளில் குழாய்களில் கசிவு உள்ளது. அதை 2 நாள்களுக்குள் சரிசெய்துவிடுவோம். மேலும் மேடான பகுதிகளுக்கு தண்ணீர் சென்று சேரும் வகையில் புதிதாக வால்வுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அனைத்துப் பகுதிகளுக்கும் குடிநீர் சீராக விநியோகிக்கப்படும் என்றார் அவர்.
அணைகளில் நீர்மட்டம்
ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 3.50 அடியாக உள்ளது. அணைக்கு 140 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 75 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணையில் 24.10 அடி நீர் உள்ளது. அணைக்கு 15 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து நீர் வெளியேற்றப்படவில்லை. சிற்றாறு 1 அணையில் 5.25 அடியும், சிற்றாறு 2 அணையில் 5.34 அடியும், பொய்கை அணையில் 8.80 அடியும், மாம்பழத்துறையாறு அணையில் 41.99 அடியும் நீர் இருப்பு உள்ளது.
குமரி மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு மிதமான சாரல் மழை பெய்தது. பெருஞ்சாணி அணையில் 1.2 மி.மீ., புத்தன் அணையில் 1 மி.மீ., நாகர்கோவிலில் 0.3 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.