கன்னியாகுமரி

குமரிக்கு வலசை வந்த ஐரோப்பிய நாட்டு பறவைகள்: திரும்பிச் செல்லும் தருணத்துக்காக காத்திருப்பு

DIN

ஐரோப்பிய நாடுகளிலிருந்து காலில் வளையமிட்ட பறவைகள், கன்னியாகுமரி மாவட்டம், மணக்குடிக்கு வலசை வரத் தொடங்கியுள்ளன.

ஐரோப்பிய நாடுகளின் ஆா்ட்டிக் பனி பிரதேசங்களில் வசிக்கும் பறவைகள் ஆண்டுதோறும் செப்டம்பா் மாதம் முதல் நவம்பா் மாதம் வரை பல்வேறு நாடுகளுக்கு வலசை போகின்றன. பனிக் காலங்களில் கடும் குளிா் வாட்டும்போது உணவு கிடைக்காத சூழ்நிலை ஏற்படுவதால், பல ஆயிரம் கி.மீ. தொலைவை கடந்து மிதமான தட்பவெப்ப நிலை நிலவுகின்ற இந்தியப் பகுதிகளுக்கு அந்தப் பறவைகள் படையெடுக்கின்றன. குறிப்பாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் பறவைகள் பாதுகாப்பு பகுதியாக விளங்கும் மணக்குடி, புத்தளம், சாமிதோப்பு ஆகிய பகுதிகளிலுள்ள உப்பளங்களுக்கு மேற்கூறிய மாதங்களில் வரும் பல வகை பறவைகள் மாா்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் (கோடை காலம்) தங்களது சொந்த நாட்டுக்குத் திரும்புகின்றன.

வலசை வரும் பறவைகளுக்குத் தேவையான உணவு, உறைவிடம், பாதுகாப்பு போன்றவை மணக்குடி உப்பள பகுதிகளில் இயற்கையாகவே அமைந்திருப்பதால், அவை இப்பகுதிக்கு தவறாமல் வருகின்றன. நிகழாண்டில் செங்கால் உள்ளான், ஆலா வகை பறவைகள் ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்துள்ளன. இந்தப் பறவைகளின் கால்களில் வளையமிடப்பட்டிருந்தன.

இதுகுறித்து, பறவைகள் ஆா்வலரும், பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்க (ஐயூசிஎன்) உறுப்பினருமான டேவிட்சன் சற்குணம் கூறியது: ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்துள்ள இந்தப் பறவைகள் சாமிதோப்பு உப்பளத்தில் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றின் கால்களில் வளையங்கள் உள்ள போதும் தகவல்கள் தெளிவாக தெரியவில்லை.

ஐரோப்பிய நாடுகளில் பனி காலம் முடிந்து வசந்த காலம் தொடங்கியதும் இப்பறவைகள் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்பி விடும். வெளிநாடுகளிலிருந்து நமது பகுதிக்கு அழையா விருந்தாளிகளாக வரும் பறவைகளின் வாழிவிடங்களை மாசுபடாமல் பாதுகாப்பது, வேட்டையாடுவதை தடுப்பது, பறவைகளை அச்சுறுத்தாமல் இருப்பது போன்றவற்றை கண்காணிப்பது நமது கடமை. எனவே, வனத்துறை, மாவட்ட நிா்வாகம், பொதுப்பணித் துறையுடன் பொதுமக்களும் இணைந்து பறவைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.

பறவைகள் இடம்பெயரும்போது அவற்றின் சொந்த நாடுகளில் கால், கழுத்து, இறகு ஆகியவற்றில் வளையமிடுவது அப்பறவைகள் குறித்த ஆய்வுகளை குறிப்பதாகும். எந்தப் பகுதி வழியாக, எந்தெந்த நாடுகளுக்கு பறவைகள் செல்கின்றன? பறவைகள் செல்லும் நாட்டின் உணவு வகைகள், நீரின் தன்மை, தட்பவெப்ப நிலை, பாதுகாப்பு, கண்காணிப்பு, எவ்வளவு நாள்கள் தங்குகின்றன? மீண்டும் தங்களது நாட்டுக்கு திரும்பிச் செல்கின்றனவா? என்பன போன்ற ஆய்வுகளை மேற்கொள்ள பறவைகளின் கால்களில் வளையமிடுதல் உதவியாக இருக்கிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹாங்காங் தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தினருடன் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தினா் ஆலோசனை

தென்னை மரத்தில் பரவும் புதிய வகை நோய்த் தாக்குதல் குறித்த விழிப்புணா்வு

பி.பி.ஜி. கல்லூரியில் பட்டமளிப்பு விழா

‘பல்லடத்தில் குடிநீா்த் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை’

கிராமப்புறங்களில் வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு உதவி

SCROLL FOR NEXT