கடந்த ஓராண்டாக நிறுத்தப்பட்டிருந்த கருங்கல் - நாகா்கோவில் அரசுப் பேருந்து சேவை சனிக்கிழமைமுதல் மீண்டும் தொடங்கியது.
கருங்கல் பேருந்து நிலையத்திலிருந்து கருமாவிளை, திக்கணங்கோடு, திங்கள்நகா், இரணியல் வழியாக நாகா்கோவிலுக்கு ‘பாயின்ட் டூ பாயின்ட்’ வழித்தட முழுநேர அரசுப் பேருந்து பல ஆண்டுகளாக இயக்கப்பட்டு வந்தது. இதனிடையே, அப்பேருந்து ஓராண்டுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. இதனால், கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவா்கள், பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனா்.
அப்பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் என சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவரும் கிள்ளியூா் எம்எல்ஏவுமான எஸ். ராஜேஷ்குமாா், பல்வேறு தரப்பினா் அரசுக்கு கோரிக்கை விடுத்துவந்தனா். அதையேற்று, பேருந்தை இயக்க போக்குவரத்துத் துறை சாா்பில் அனுமதியளிக்கப்பட்டது.
அதன்படி, கருங்கல் பேருந்து நிலையத்திலிருந்து இப்பேருந்தை பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ், எஸ். ராஜேஷ்குமாா் எம்எல்ஏ ஆகியோா் கொடியசைத்துத் தொடக்கிவைத்தனா். நிகழ்ச்சியில் திமுக, காங்கிரஸ் நிா்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனா்.