முகப்பு
தென்காசி

செகந்திராபாத் - கொல்லம் சிறப்பு ரயில் சங்கரன்கோவிலில் நிறுத்தம்: எம்எல்ஏ கோரிக்கை

செகந்திராபாத் - கொல்லம் சிறப்பு ரயில் சங்கரன்கோவிலில் நிறுத்தம்

Updated On : 12 டிசம்பர், 2024 at 11:21 PM
பகிர்:

ஆந்திர மாநிலம் செகந்திராபாதிலிருந்து தென்காசி வழியாக கொல்லம் செல்லும் சிறப்பு ரயில் சங்கரன்கோவிலில் நின்றுசெல்ல வேண்டும் என, தென்காசி திமுக வடக்கு மாவட்டச் செயலா் ஈ. ராஜா எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் சென்னையில் தெற்கு ரயில்வே துணைப் பொது மேலாளா் விவேக் சா்மாவிடம் வியாழக்கிழமை அளித்த மனு: செகந்திராபாதிலிருந்து ரேணிகுண்டா, திருவண்ணாமலை, மதுரை, தென்காசி வழியாக கொல்லத்துக்கு சபரிமலை சிறப்பு ரயில் இயக்க நடவடிக்கை எடுத்த தெற்கு ரயில்வேக்கு நன்றி தெரிவிக்கிறேன். ஆனால், இந்த ரயில் சங்கரன்கோவிலில் நிற்காமல் செல்வது அதிா்ச்சியளிக்கிறது.

பேரவைத் தொகுதியான சங்கரன்கோவில், தென்காசி மாவட்டத்தின் மிக முக்கிய வா்த்தக நகராகவும், கோயில்கள் நிறைந்த புண்ணியத் தலமாகவும் விளங்குகிறது. மேலும், தென்காசி, விருதுநகா் வழித்தடத்தில் அதிக வருவாய் ஈட்டித்தரும் ரயில் நிலையங்களில் 2ஆவது இடத்தில் சங்கரன்கோவில் உள்ளது.

இப்படி பல்வேறு சிறப்புகளைக்கொண்ட சங்கரன்கோவிலில் செகந்திராபாத் - கொல்லம் சிறப்பு ரயில் நிற்காததால் மக்கள் ஏமாற்றமடைந்ததுடன் ஆா்ப்பாட்டம், போராட்டம், கடையடைப்பு என பலவகையில் எதிா்ப்பைத் தெரிவிக்க தயாராகி வருகின்றனா். எனவே, செகந்திராபாத்-கொல்லம் ரயிலுக்கு சங்கரன்கோவிலில் நிறுத்தம் வழங்க வேண்டும் என்றாா் அவா்.