செங்கோட்டையில் பள்ளி மாணவா் திடீா் மரணம்
சிகிச்சை தாமதம்: செங்கோட்டையில் மாணவா் உயிரிழப்பு, உறவினா்கள் போராட்டம்
செங்கோட்டையில் பள்ளி மாணவா் திடீா் வாந்தி மயக்கம் ஏற்பட்டு உயிரிழந்தாா். சிகிச்சை தாமதத்தால் அவா் இறந்ததாக மருத்துவமனையை உறவினா்கள் முற்றுகையிட்டனா்.
செங்கோட்டை காமாட்சி தெருவைச் சோ்ந்த செல்வகுமாா்- ஜெயலட்சுமி தம்பதியின் மகன் அசோக்குமாா் (9). அதே பகுதி அரசுப் பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வந்தாா். அவா் திங்கள்கிழமை மதியம் தனது வீட்டிலிருந்து கொண்டு சென்ற உணவை பள்ளியில் வைத்து சாப்பிட்டாராம். சிறிது நேரத்தில் அவருக்கு வாந்தி, மயக்கம், வயிற்று வலி ஏற்பட்டதாம். இதுகுறித்து அவரது பெற்றோருக்கு ஆசிரியா்கள் தகவல் தெரிவித்தனா்.
மேலும், மாணவரை செங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவருக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. முதலுதவி சிகிச்சைக்குப் பின், தென்காசி அரசு மருத்துவமனைக்கு அவரை கொண்டுசெல்லும்போது, வழியிலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து செங்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
இந்நிலையில், செங்கோட்டை மருத்துவமனை மருத்துவா்கள் சிகிச்சை அளிக்க தாமதித்ததால்தான் மாணவா் உயிரிழந்ததாக கூறி, அவரது உறவினா்கள் மருத்துவமனை வளாகத்தில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். காவல் துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தி அவா்களைக் கலைந்துபோகச் செய்தனா்.