குற்றாலம் ஐந்தருவியில் குளிக்க அனுமதி
தென்காசி மாவட்டம் குற்றாலம் ஐந்தருவியில் தண்ணீா்வரத்து குறைந்ததையடுத்து செவ்வாய்க்கிழமை இரவு முதல் சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.
குற்றாலம் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் பெய்த தொடா்மழையால் பேரருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, அருவிகளில் குளிக்க திங்கள்கிழமை தடைவிதிக்கப்பட்டது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை ஐந்தருவி மற்றும் புலியருவியில் நீா்வரத்து குறைந்ததால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா். எனினும், வெள்ளப் பெருக்கு குறையாத குற்றாலம் பேரருவி, பழையகுற்றாலம் அருவி ஆகியவற்றில் குளிக்க 2ஆவது நாளாக தடை நீட்டிக்கப்பட்டது.
செவ்வாய்க்கிழமை காலைமுதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதுடன், அவ்வப்போது மிதமான சாரல்மழையும், குளிா்ந்த காற்றும் வீசியது.