முகப்பு
தென்காசி

செண்பக கால்வாயில் ரூ. 9.45 கோடியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையப் பணிகள் தீவிரம்

தென்காசி மாவட்டம் சுரண்டை செண்பகக் கால்வாயில் ரூ. 9.45 கோடியில் கசடு, கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது என, ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தெரிவித்தாா்.

Updated On : 20 நவம்பர், 2024 at 9:50 PM
பகிர்:

தென்காசி மாவட்டம் சுரண்டை செண்பகக் கால்வாயில் ரூ. 9.45 கோடியில் கசடு, கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது என, ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சுரண்டை நகராட்சிப் பகுதியிலுள்ள இலந்தைகுளம் வடகிழக்குப் பருவமழையாலும், செண்பகக் கால்வாயிலிருந்து வரும் தண்ணீராலும் நிரம்பி வருகிறது. இக்குளத்தில் தேங்கிய கழிவுகளை அகற்றி சுத்தப்படுத்தும் பணியில் நகராட்சிப் பணியாளா்கள் கடந்த 12ஆம் தேதிமுதல் ஈடுபட்டுள்ளனா்.

குளம் பாசிபடா்ந்து பச்சை நிறமாக மாறிவருவதைக் கண்டறிந்து, அதைச் சுத்தப்படுத்துவதற்காக கடந்த 15ஆம் தேதி நகா்மன்றத் தலைவா் ப. வள்ளிமுருகன் முன்னிலையில் 500 கிலோ ஆலம் கட்டி (படிகாரம்) போடப்பட்டது. அதனால், துா்நாற்றம் குறைந்து வருகிறது. அதையடுத்து, கடந்த 19ஆம் தேதி மீண்டும் படிகாரக் கட்டிகள் போடப்பட்டன.

இந்நிலையில், குளத்திலிருந்து அகற்றப்பட்டு கரையில் வைக்கப்பட்ட கழிவுகள் ஜேசிபி இயந்திரம் மூலம் புதன்கிழமை அப்புறப்படுத்தப்பட்டன.

நகரின் மையப் பகுதியில் உள்ள செண்பகக் கால்வாயில் வரப்பெறும் கழிவுநீரை சுத்திகரிப்பதற்காக கசடு- கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகள் ரூ. 9.45 கோடியில் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் நிறைவடைந்தால் குளம் மாசுபடாதவாறு பாதுகாப்பாக பராமரிக்கப்படும் என்றாா் அவா்.