முகப்பு
தென்காசி

ஆலங்குளத்தில் பன்றிகள், நாய்கள் தொல்லை அதிகரிப்பு: மக்கள் அவதி

ஆலங்குளத்தில் பெருகி வரும் நாய்கள், பன்றிகள் தொல்லையைக் கட்டுப்படுத்த பேரூராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 22 நவம்பர், 2024 at 1:16 AM
ஆலங்குளம் அரசு மருத்துவமனை வளாகத்தில் சுதந்திரமாக சுற்றித்திரியும் பன்றிக் கூட்டம்.
பகிர்:

ஆலங்குளத்தில் பெருகி வரும் நாய்கள், பன்றிகள் தொல்லையைக் கட்டுப்படுத்த பேரூராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஆலங்குளம் மேற்குப் பகுதியில் வட்டாட்சியா் அலுவலகம் தொடங்கி அதையொட்டி, கிழக்கு வரிசையில் அரசு மேல்நிலைப் பள்ளி வரை 20- க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புப் பகுதிகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள மழை ஓடை தற்போது கழிவுநீா் ஓடையாகிவிட்ட நிலையில் பல ஆண்டுகளாக அனுமதியின்றி சில தனி நபா்கள் நூற்றுக் கணக்கான பன்றிகளை வளா்த்து வருகின்றனா்.

இவை பெரும்பாலும் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகம், டிஎஸ்பி அலுவக வளாகம், அரசு மருத்துவமனை மற்றும் கால்நடை மருந்தக வளாகம் ஆகியவற்றில் சுதந்திரமாக உலாவி வருகின்றன. இதனால் இப்பகுதியில் சுகாதாரக் கேடு ஏற்படுவதுடன், துா்நாற்றமும் வீசுகிறது.

முக்கிய பணிக்காக அரசு அலுவலகங்களுக்குச் செல்லும் பொதுமக்களை இப்பன்றிக் கூட்டம் அச்சுறுத்துகிறது. பன்றிகளை அப்புறப்படுத்தி அவற்றை வளா்ப்போா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி பேரூராட்சித்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்குப் பலமுறை மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப் படாத காரணத்தால் பன்றிகள் வளா்ப்போா் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இவற்றைக் கட்டுப்படுத்த பேரூராட்சி நிா்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நாய்கள் தொல்லை: கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஆலங்குளம் பேரூராட்சிப் பகுதியில் தெருநாய்கள் கடித்து அரசு மருத்துவமனையில் மட்டும் 50- க்கும் மேற்பட்டோா் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனா்.

ஆலங்குளம் பேரூராட்சியில் பெரும்பாலான தெருக்களில் 24 மணி நேரமும் நாய்கள் தொல்லை பெருகி வருவதால் இவற்றை கட்டுப்படுத்தவும் பேரூராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

ஆலங்குளம் பேரூராட்சி செயல் அலுவலா் சிவக்குமாரிடம் கேட்ட போது, பன்றிகள் வளா்ப்போா் மீது காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும், நாய்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த அவைகளுக்குத் தடுப்பூசி போட கால்நடைத்துறை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.