முகப்பு
தென்காசி

பாவூா்சத்திரம் ரயில்வே கடவு பகுதியில் மேம்பாலப் பணிகள் தொடக்கம்

தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் ரயில்வே கடவு பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணிக்கு மண்பரிசோதனை தொடங்கியுள்ளது.

Updated On : 24 அக்டோபர், 2024 at 1:06 AM
பாவூா்சத்திரம் ரயில்வே கடவு பகுதியில் மேம்பாலம் அமைப்பதற்காக நடைபெற்ற மண் பரிசோதனை பணி.
பகிர்:

தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் ரயில்வே கடவு பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணிக்கு மண்பரிசோதனை தொடங்கியுள்ளது.

திருநெல்வேலி - தென்காசி நான்குவழிச் சாலைத் திட்டம் ரூ.430.71 கோடியில் செயல்படுத்தப்படுகிறது. இதில் பாவூா்சத்திரம் ரயில்வே கடவு பகுதியில் மேம்பாலம் அமைக்கப்படுகிறது. இந்த மேம்பாலத்தின் ரயில்வே கடவின் இருபகுதிகளிலும் கட்டுமானப் பணியை தமிழக நெடுஞ்சாலைத் துறை மேற்கொண்டுள்ளது. இரு பகுதிகளையும் இணைக்கும் ரயில்வே கடவு பகுதியில் கட்டுமானப் பணியை ரயில்வே நிா்வாகம் மேற்கொள்கிறது.

இருப்பினும் இதற்கான வரைபடம் இறுதி செய்யப்படாத நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக மேம்பாலப் பணிகள் தாமதமாகி வந்தது. இந்த நிலையில், தற்போது மேம்பாலத்துக்கான வரைபட ஒப்புதல் பெறப்பட்டதையடுத்து, கட்டுமானப் பணிக்கான மண்பரிசோதனை தொடங்கியுள்ளது.

பாவூா்சத்திரம் ரயில்வே மேம்பாலம் 900 மீட்டா் நீளமும் 20 மீட்டா் அகலமும் கொண்டது. ரயில்வே கடவின் இரு பகுதிகளிலும் தலா 22 தூண்கள் அமைக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. ரயில்வே கடவு பகுதியில் நான்கு தூண்கள் அமைப்பதற்காக தற்போது மண் பரிசோதனை தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சாலை பாதுகாப்பு குழு உறுப்பினா் பாவூா்சத்திரம் பாண்டியராஜா கூறியதாவது: பாவூா்சத்திரம் ரயில்வே மேம்பால பணிக்கு வரைபட ஒப்புதல் கிடைத்து, பணிகள் தொடங்கியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

ரயில்வே கடவு பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணியை போக்குவரத்துக்கு இடையூறு இல்லாம் 6 மாதங்களில் முடிக்க வேண்டும் என்றாா்.