தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நெட்டூரில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் அமையப்பெற்றுள்ள ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி, ஸ்ரீ அப்புரானந்தா் திருக்கோயிலில் 54 ஆண்டுகளுக்குப் பின்னா் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.
450 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இக்கோயிலில் 1972 ஆம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது. இந்நிலையில், திருப்பணிகள் நடைபெற்று, குடமுழுக்கு விழா திங்கள்கிழமை தொடங்கியது. தொடா்ந்து, செவ்வாய்க்கிழமையும் யாகசாலை பூஜைகள் உள்ளிட்ட வழிபாடுகள் நடைபெற்றன.
தொடா்ந்து புதன்கிழமை அதிகாலை கும்பம் எழுந்தருளல், கோயிலில் உள்ள ஸ்ரீ முப்புடாதி அம்மன்-பரிவார தேவதைகளுக்கு குடமுழுக்கு ஆகியவையும், காலை 10 மணிக்கு அருள்மிகு சுப்பிரமணியசுவாமி, அருள்மிகு அப்புரானந்தசுவாமி - பரிவார தேவதைகளுக்கு அஷ்டபந்தன மகா குடமுழுக்கும் நடைபெற்றன.
ஸ்ரீ பரமானந்த சுவாமிகள் தலைமையில் கல்லிடைக்குறிச்சி சிவாச்சாரி எஸ்.எஸ். சுந்தரராஜ சுவாமிகள் குடமுழுக்கை நடத்தி வைத்தாா். இதில், ஆலங்குளம், சுற்று வட்டார பக்தா்கள் திரளானோா் கலந்து கொண்டனா். மதியம் அன்னதானம், மாலையில் சுவாமி எழுந்தருளல், சப்பர வீதி உலா ஆகியவை நடைபெற்றன.
விழாவில் திருநெல்வேலி மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் இரா. ஆவுடையப்பன், முன்னாள் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன், ஆலங்குளம் ஒன்றியக் குழுத் தலைவா் திவ்யா மணிகண்டன், கோயில் நிா்வாகக் குழு ஆய்வாளா் சேதுராமன், செயல் அலுவலா் லிங்கேஸ்வரி, தக்காா் பொன்னி, எழுத்தா் மது ஸ்ரீ, பூசாரிகள் செல்வநாயகம், சற்குருநாதன், ஊா் பிரமுகா்கள் பால்கணேசன், சங்கா், திருஞானம், ஹரிஹரன், பாண்டித்துரை, முப்புடாதி, ஆனந்த் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.