தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கம் சார்பில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவருக்கு உள்ளதுபோல மருந்தாளுநர்களின் பணி நேரத்தை மாற்ற வேண்டும். பொது சுகாதாரத் துறை இயக்குநரகத்தில் 2 மருந்து கிடங்கு அலுவலர், மாவட்ட துணை இயக்குநர் அலுவலக கிடங்கு, மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தலா ஒரு தலைமை மருந்தாளுநர் மற்றும் மண்டல வாக்இன் கூலர்களுக்கு 10 மருந்தாளுநர் பணியிடங்களும் உருவாக்க வேண்டும்.
தொகுப்பூதிய முறையில் பணியாற்றி வந்த மருந்தாளுநர்களுக்குப் பணி நியமன நாள்முதல் காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும். மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் வழங்கப்படும் ஊக்கத்தொகையை மற்ற பிரிவினருக்கு போல் மருந்துக்கிடங்கு மற்றும் அறுவை மருந்துக்கிடங்கு மருந்தாளுநர்களுக்கும் வழங்க வேண்டும். மாவட்ட காசநோய் மையங்களில் பணிபுரியும் மருந்தாளுநர்களுக்கு மற்ற பிரிவினருக்கு வழங்குவது போல ஒரு மாதம் கட்டாய விடுப்பு வழங்க வேண்டும். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நோயாளர் நலச்சங்க பணியிலிருந்து மருந்தாளுநர்களை விடுவிக்க வேண்டும். இயக்குநரகங்களில் மருந்தியல் அலுவலர் பணியிடங்களை உருவாக்க வேண்டும். மருந்தியல் கல்லூரிகளில் காலியாக உள்ள போதகர் மற்றும் விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்க மாநிலச் செயலர்கள் ஆ.கிருஷ்ணமூர்த்தி, கு.கண்ணன், மாவட்டத் தலைவர் லட்சுமணன், துணைத் தலைவர்கள் வேலுச்சாமி, முத்துகுமார், இணைச் செயலர் சீனிவாசகம், ஆனந்தகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.