முகப்பு
திருநெல்வேலி

தந்தை இறந்த நிலையிலும் சுதந்திர தினக் கடமையை நிறைவேற்றிய காவல் ஆய்வாளர் மகேஸ்வரி

74 ஆவது ஆண்டு சுதந்திர தினம்  கொண்டாடும் வேளையில் பாளையங்கோட்டையில் ஆயுதப்படை காவல் ஆய்வாளர் மகேஸ்வரி தனது தந்தை இறந்த போதிலும் நாட்டிற்கான தனது கடமையை நிறைவேற்றி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:07 PM
சுதந்திர தின அணிவகுப்பில் பங்கேற்ற காவல் ஆய்வாளர் மகேஸ்வரி
பகிர்:

74 ஆவது ஆண்டு சுதந்திர தினம்  கொண்டாடும் வேளையில் பாளையங்கோட்டையில் ஆயுதப்படை காவல் ஆய்வாளர் மகேஸ்வரி தனது தந்தை இறந்த போதிலும் நாட்டிற்கான தனது கடமையைச் செய்வதில் தவறவில்லை என்பதை அறிந்த அதிகாரிகள் அனைவரும் வியப்புற்றனர்.

நெல்லை பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் இன்று நடந்த சுதந்திர தின நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். 

இந்த அணிவகுப்பை தலைமையேற்று நடத்தியவர் ஆயுதப்படை காவல் ஆய்வாளர் மகேஸ்வரி.

மகேஸ்வரி அவர்களின் தந்தை நாராயணசுவாமி ( வயது 83 ) வெள்ளிக்கிழமை இரவு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இந்த செய்தியைக் கேட்ட காவல் ஆய்வாளர் மகேஸ்வரி  திண்டுக்கல் மாவட்டம் வடமதுரைக்குப் புறப்பட இருந்தார்.  ஆனால்  சுதந்திர தின விழாவில் அணிவகுப்பு நிகழ்ச்சியை முன்நின்று நடத்த வேண்டிய சூழல் இருந்தது. சனிக்கிழமை  காலை 8 மணிக்கு  நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில் அணிவகுப்பு மரியாதையை முடித்து உடனடியாக தனது தந்தை உயிரிழந்த துக்க நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றார். எந்த வகையிலும் குறைவின்றி அணிவகுப்பு நிகழ்த்திய பிறகுதான் அனைவருக்கும் இந்த செய்தி தெரிந்தது. இதனை தொடர்ந்து அனைவரும் கம்பீரமான அந்த காவல் அதிகாரியை ஆறுதல் தெரிவித்து வழி அனுப்பி வைத்தனர்.

காவல் ஆய்வாளர் மகேஸ்வரியின் கணவர் பாலமுருகன் நெல்லை மாநகர காவல்துறை நுண்ணறிவுப் பிரிவு காவலராக இருக்கிறார். இவர் கடந்த நான்கு மாதங்களாக கரோனா பாதிப்புகள் குறித்து கணக்கெடுக்கும் பணியை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் மேற்கொண்டு வந்தார். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக அவரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தர்.  நேற்று குணமடைந்து மீண்டும் பணிக்கு வந்து விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சுதந்திர தின விழாவை முடித்து தனது தந்தையின் இறுதி நிகழ்ச்சியை கலந்து கொள்ளும் காவல் ஆய்வாளர் மகேஸ்வரியின் கடமை உணர்வு அனைவரும் வியப்புறச் செய்துள்ளது.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.