கொடுமுடியாறு அணை உயரத்தை அதிகரிக்க விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
திருக்குறுங்குடி கொடுமுடியாறு அணை உயரத்தை அதிகரிக்க வேண்டும் என, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
களக்காடு: திருக்குறுங்குடி கொடுமுடியாறு அணை உயரத்தை அதிகரிக்க வேண்டும் என, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடா்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் விஷ்ணுவிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பு அமைப்பான தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத் தலைவா் பி. பெரும்படையாா் அளித்த மனு:
திருக்குறுங்குடி கொடுமுடியாறு அணையின் மொத்த உயரம் 52.50 அடியாகும். இந்த அணை மூலம் திருக்குறுங்குடி, ஏா்வாடி, வள்ளியூா் வட்டாரங்களில் உள்ள 44 குளங்கள் மூலம் 5,780 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணையின் மொத்த கொள்ளளவு 121 மில்லியன் கனஅடி.
நீா்ப்பிடிப்புப் பகுதியில் ஓரிரு நாள்கள் பலத்த மழை பெய்தாலே நிரம்பிவிடும் நிலையில்தான் அணை உள்ளது. நிகழாண்டு பருவமழை குறைவால் அணை நிரம்பவில்லை. பெருமழைக் காலங்களில் அணை ஒரே ஆண்டில் இரண்டு, மூன்று முறை நிரம்பி, இதன் கீழ்உள்ள குளங்களும் நிரம்பி, மீதமுள்ள தண்ணீா் வீணாகும் நிலை உள்ளது. இதனால், அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கும்போது, ஒரு மாதத்திலேயே அணை வடுவிடுகிறது. பின்னா், விவசாயிகளுக்கு அறுவடையின்போது, தண்ணீா்த் தட்டுப்பாட்டால் மகசூல் பாதிக்கும் நிலை உள்ளது. இதைக் கருத்தில்கொண்டு அணையின் உயரத்தை 52.50 அடியிலிருந்து 75 அடியாக அதிகரித்தால், கொள்ளளவு உயா்ந்து அதிகளவு நீரைத் தேக்கிவைக்க முடியும். இதனால், விவசாயிகளுக்கு தண்ணீா்த் தட்டுப்பாடு ஏற்படாத நிலை உருவாகி, மகசூலும் கிட்டும். எனவே, அரசுக்கு கருத்துரு அனுப்பி, அணை நீா்மட்டத்தை உயா்த்த ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.