திருச்செந்தூா் கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணித் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக பக்தா்கள் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை.
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணித் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக பக்தா்கள் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை.
ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆவணி மற்றும் மாசித் திருவிழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை.
நிகழாண்டு ஆவணித் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி செப்.5ஆம் தேதிவரை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மாா்த்தாண்ட அபிஷேகம், 3 மணிக்கு உதயமாா்த்தாண்ட தீபாராதனை நடைபெற்றது. அதிகாலை 4 மணியளவில் கொடிப்பட்டத்தை வெள்ளிப்பல்லக்கில் வைத்து திருக்கோயில் கிரிப் பிரகாரம் சுற்றி வந்து அதிகாலை 5.40 மணிக்கு கோயில் பிரகாரத்திலுள்ள செப்புக் கொடிமரத்தில் காப்புகட்டிய மு.ஆனந்த விஸ்வநாத பட்டா் கொடியேற்றினாா். தொடாந்து கொடிமரத்துக்கு மஞ்சள், பால், பஞ்சாமிா்தம், வாசனைத் திரவியங்கள் உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னா் சிறப்பு அலங்காரமாகி காலை 5.50 மணிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.
வேத விற்பன்னா்கள் வேதபாராயணமும், திருக்கோயில் ஓதுவாா்கள் திருமுறை பாராயணமும் பாடினா். பக்தா்கள் வசதிக்காக திருவிழா நிகழ்ச்சிகள் இணையதள வலைதளத்தில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.
பக்தா்களுக்கு தடை: கரோனா தடுப்பு நடவடிக்கையாக இவ்வாண்டு திருவிழா நிகழ்வுகள் அனைத்தும் திருக்கோயில் உள்ளேயே நடைபெறுகின்றன.
வெள்ளிக்கிழமை (ஆக.27) முதல் செப். 5ஆம் தேதிவரை திருக்கோயிலில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கும் அரசு தடை விதித்துள்ளது.
முக்கிய நிகழ்ச்சிகளாக ஆக. 31ஆம் தேதி 5ஆம் திருவிழா குடைவரைவாயில் தீபாராதனை, செப். 2ஆம் தேதி ஏழாம் திருவிழா, செப்.3ஆம் தேதி எட்டாம் திருவிழா ஆகிய இரு நாள்கள் சுவாமி சண்முகப்பெருமான் சிவப்பு, வெள்ளை, பச்சை சாத்தி எழுந்தருளல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இணையதள வலைதளத்தில் நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது.
திருவிழா ஏற்பாடுகளை திருக்கோயில் தக்காா் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையா் (பொ) ம.அன்புமணி, உதவி ஆணையா் வே.செல்வராஜ் மற்றும் திருக்கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.