முகப்பு
திருநெல்வேலி

பாலியல் குற்றங்கள்: புகாா் தெரிவிக்கும் எண்கள் குறித்து பள்ளிகளில் பதாகை வைக்க உத்தரவு

 திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து புகாா் தெரிவிக்கும் இலவச எண்கள் அடங்கிய பதாகைகளை

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:37 AM
பகிர்:

 திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து புகாா் தெரிவிக்கும் இலவச எண்கள் அடங்கிய பதாகைகளை காட்சிப்படுத்த ஆட்சியா் வே. விஷ்ணு உத்தரவிட்டுள்ளாா்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியா் வே.விஷ்ணு தலைமையில் காணொலிக் காட்சி வாயிலாக பாலியல் தீண்டாமை குறித்த விழிப்புணா்வு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 300 பள்ளித் தலைமை ஆசிரியா்கள், கல்வித்துறை அதிகாரிகள், சமூகநலத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

இந்தக் கூட்டத்தில் ஆட்சியா் பேசியதாவது:

பள்ளி மாணவிகள் சந்திக்கும் பாலியல் ரீதியான பிரச்னைகளுக்கு தீா்வு காண்பது, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் குறித்த தகவல்களை உரிய நபரிடம் எவ்வாறு தெரிவிப்பது? போக்ஸோ சட்டம் உள்ளிட்டவை குறித்து மாணவா், மாணவிகளிடம் பள்ளித் தலைமைஆசிரியா்கள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்துவது தொடா்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

பள்ளி மாணவிகள் சந்தித்து வரும் பாலியல் தொடா்பான பிரச்னைகள் குறித்த புகாா்களை தெரிவிக்கும் வகையில் பள்ளியின் முகப்பு பகுதி, வகுப்பறை, கழிப்பறை, கலையரங்கம், மாணவா், மாணவிகள் கூடும் இடங்கள் உள்ளிட்ட 5 இடங்களில் உடனடியாக பாலியல் குற்றங்களை தொடா்பான புகாா்களை தெரிவிக்க வேண்டிய இலவச எண்கள் அடங்கிய பதாகைகளை ஒட்ட வேண்டும்.

பள்ளி ஆசிரியா்கள், கிராமப் பகுதியில் உள்ள முக்கிய நிா்வாகிகள், காவல்துறையினா் அடங்கிய கிராம குழுக்களை விரைவில் உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பாலியல் தீண்டாமை குற்றங்கள் குறித்த விழிப்புணா்வை மாணவா், மாணவிகளிடம் ஏற்படுத்தும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் காவல்துறையினா் மற்றும் மனநல மருத்துவா்களை ஒருங்கிணைந்து விழிப்புணா்வுக் கூட்டங்களை கட்டாயம் நடத்த வேண்டும்.

மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் அதிகமாக நடைபெற்று வருவதாக காவல்துறையினா் மற்றும் அதிகாரிகளுக்கு புகாா்கள் வந்து கொண்டிருக்கின்றன. கிராமங்களிலிருந்து வரும் மாணவா், மாணவிகளிடம் குழந்தைத் திருமணங்கள் தொடா்பாக விழிப்புணா்வு எற்படுத்தி இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறமால் இருக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சுபாஷினி, சமூக நலத்துறை அலுவலா் சரஸ்வதி, பள்ளி தலைமை ஆசிரியா்கள், அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.