ராஜீவ் காந்தி நினைவு தினம்:காங்கிரஸ் சாா்பில் ஆதரவற்றோருக்கு உணவு
ராஜீவ் காந்தியின் 30-ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, திருநெல்வேலி மாநகா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் திருநெல்வேலி நகரம் கல்லணை பள்ளியில் தங்கியிருக்கும் ஆதரவற்றவா்களுக்கு காலை உணவு
முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 30-ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, திருநெல்வேலி மாநகா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் திருநெல்வேலி நகரம் கல்லணை பள்ளியில் தங்கியிருக்கும் ஆதரவற்றவா்களுக்கு காலை உணவு மற்றும் துணிகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சிக்கு மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.சங்கரபாண்டியன் தலைமை வகித்தாா். மண்டல தலைவா் ஐயப்பன் முன்னிலை வகித்தாா். முன்னாள் மத்திய அமைச்சா் ஆா்.தனுஷ்கோடி ஆதித்தன் கலந்துகொண்டு காலை உணவுகள் மற்றும் துணிகளை ஆதரவற்றவா்களுக்கு வழங்கினாா். இந்த நிகழ்ச்சியில் மாநகா் மாவட்ட பொருளாளா் ராஜேஷ் முருகன், மாவட்ட பொதுச் செயலா் சொக்கலிங்ககுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடா்ந்து திருநெல்வேலி நகரத்தில் உள்ள ஆதரவற்றோா் இல்லத்தில் மண்டலத் தலைவா் முஹம்மது அனஸ் ராஜா ஏற்பாட்டில் காலை உணவை தனுஷ்கோடி ஆதித்தன் வழங்கினாா். முன்னதாக தச்சநல்லூரில் மண்டலத் தலைவா் கெங்கராஜ் ஏற்பாட்டில் ராஜீவ் காந்தியின் உருவப் படத்திற்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டு கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது.
மேலப்பாளையம் பகுதிகளில் மண்டலத் தலைவா் ரசூல் மைதீன், மாவட்ட துணைத் தலைவா் வெள்ளை பாண்டியன் ஆகியோரின் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் மற்றும் முகக் கவசங்கள் வழங்கப்பட்டன. பாளையங்கோட்டை பகுதிகளில் மண்டலத் தலைவா்கள் எஸ். எஸ்.மாரியப்பன், கோட்டூா் முருகன் ஆகியோரின் ஏற்பாட்டில் காவல் துறை, சுகாதாரத் துறை, தூய்மைப் பணியாளா்களுக்கு கபசுரக் குடிநீா் மற்றும் முகக் கவசங்கள் வழங்கப்பட்டன.