முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் தளர்வில்லாத பொதுமுடக்கம்: சாலைகள் வெறிச்சோடின

கரோனா நோய்த் தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் தளர்வில்லாத பொதுமுடக்கம் திங்கள்கிழமை அமல்படுத்தப்பட்டது. இதனால் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடின.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:17 PM
நெல்லையில் தளர்வில்லாத பொதுமுடக்கம்.
பகிர்:

கரோனா நோய்த் தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் தளர்வில்லாத பொதுமுடக்கம் திங்கள்கிழமை அமல்படுத்தப்பட்டது. இதனால் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடின.

நாடு முழுவதும் கரோனா இரண்டாவது அலையின் காரணமாக நோய்த் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் தினமும் 500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்ந்து வருகிறார்கள். அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன.

திருநெல்வேலியில் கரோனா நோயாளிகளுக்கு துரித சிகிச்சை கிடைக்கச் செய்யும் வகையில் காந்திமதி மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கரோனா பிரத்யேக பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வரும் நோயாளிகள் அவசர ஆக்ஸிஜன் சிகிச்சை, கேர் சென்டர் சிகிச்சை, வீட்டில் தனிமைப்படுத்தும் சிகிச்சை ஆகியவற்றுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். 

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தமிழகத்தில் கடந்த 10 ஆம் தேதி முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், காய்கனி மற்றும் பலசரக்கு கடைகள் உள்ளிட்டவற்றில் விற்பனைக்கு அனுமதியளிக்கப்பட்டிருந்தது. கண்காணிப்பை தீவிரப்படுத்தாமல் மக்கள் சுய கட்டுப்பாட்டுடன் வெளியில் சென்று வரவும் அறிவுறுத்தப்பட்டது. 

இருப்பினும் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை எதிர்பார்த்த வகையில் குறையவில்லை. இதனால் கட்டுப்பாடுகளை அதிகரிக்க தமிழக அரசு உத்தரவிட்டதோடு திங்கள்கிழமை (மே 24) முதல் ஒரு வாரத்திற்கு எவ்வித தளர்வுகளும் இல்லாத பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என அறிவித்தது. 

அதன்படி திருநெல்வேலி மாவட்டத்தில் திங்கள்கிழமை முதல் முழுபொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. மருந்து, பால் கடைகளைத் தவிர்த்த மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள், மதுக்கூடங்களும் அடைக்கப்பட்டன. பேருந்துகள், தனியார் வாகனங்கள் இயங்கவும் தடை விதிக்கப்பட்டதால் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடின.

திருநெல்வேலி-திருவனந்தபுரம் சாலை, சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலை, வண்ணார்பேட்டை தெற்கு மற்றும் வடக்கு புறவழிச்சாலைகள் உள்ளிட்டவை வெறிச்சோடி காணப்பட்டன. உணவு விடுதிகள் குறிப்பிட்ட நேரத்தில் பார்சல் முறையில் உணவு வழங்கின. காய்கனி, பழங்கள் உள்ளாட்சித் துறையினர் மூலம் வாகனங்களில் வீதி வீதியாக சென்று விற்பனை செய்யப்பட்டது.

மருத்துவமனை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு திருநெல்வேலி மாநகர பகுதிக்குள் நுழைவோரை தாழையூத்து, பழையபேட்டை, கருங்குளம், டக்கரம்மாள்புரம், வசவபுரம் உள்ளிட்ட சோதனைச் சாவடிகளில் ஆணவங்களை சோதனை செய்த பின்பே போலீஸார் அனுமதித்தனர். 

இதுதவிர வண்ணார்பேட்டை, மேலப்பாளையம், பாளையங்கோட்டை, கே.டி.சி. நகர், பேட்டை, திருநெல்வேலி நகரம் உள்பட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைத்தும் போலீஸார் கண்காணித்தனர். முழுபொதுமுடக்கத்தால் அத்தியாவசிய பணியாளர்கள் தவிர்த்து பொதுமக்களின் நடமாட்டம் ஓரளவு குறைந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.