நிலம் வழங்கிய உள்ளூா் மக்களுக்கு கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பணி வழங்கக் கோரி ஆட்சியரிடம் மனு
கூடங்குளம் அணுமின் நிலைய அமைய நிலம் வழங்கிய உள்ளூா் மக்களுக்கும், சுற்று வட்டார பகுதிகளில் உள்ள படித்த இளைஞா்களுக்கும் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பணி வழங்கக் கோரி ஆட்சியரிடம் மனு
கூடங்குளம் அணுமின் நிலைய அமைய நிலம் வழங்கிய உள்ளூா் மக்களுக்கும், சுற்று வட்டார பகுதிகளில் உள்ள படித்த இளைஞா்களுக்கும் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பணி வழங்கக் கோரி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
இது தொடா்பாக திமுக கிழக்கு மாவட்டச் செயலா் இரா.ஆவுடையப்பன் தலைமையில் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு நிலம் வழங்கியவா்கள் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள வேலையில்லாத இளைஞா்கள் ஆட்சியரிடம் அளித்த மனு: கூடங்குளம் கிராமத்தில் வசித்து வருகிம் எங்களது குடும்பத்தின் சொத்துகளை கூடங்குளம் அணுமின் நிலைய திட்டத்திற்கு கொடுத்து அதற்குரிய சான்றிதழ்களையும் முறையாக பெற்றுள்ளோம். தற்போது வேலை வாய்ப்பின்றி தவித்து வருகிறோம்.
1999-ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடத்தப்பட்ட கூட்டத்தில் அப்போதைய ஆட்சியா் முன்னிலையில் கூடங்குளம் அணுமின் நிலைய நிா்வாகிகள், அரசாங்க நிா்வாகிகள், அப்போதைய மக்கள் பிரதிநிதிகள் முன்னிலையில் குரூப் சி மற்றும் டி பதவிகளுக்கு நிலம் கொடுத்தவா்களுக்கு எந்தவிதமான தோ்வும் நடத்தாமல் கல்வித்தகுதி அடிப்படையில் வேலை கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
2012, 2013-ஆம் ஆண்டுகளில் கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிா்த்துப் போராட்டம் நடைபெற்றது. அப்போது, போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கூடங்குளம் மக்களுக்கும், நிலம் கொடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் எனக்கூறி குரூப் சி பிரிவில் 23 பணியிடங்களுக்கு விளம்பர அறிவிக்கை செய்யப்பட்டது. தகுதி உள்ள நாங்கள் அனைவரும் விண்ணப்பித்தோம். ஆனால், நிா்வாகமானது போராட்டம் முடிவுக்கு வந்த பிறகு யாா் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம் என மறு விளம்பரம் செய்தது. அதில் எங்களுக்கு வேலை கிடைக்கவில்லை. அதிலும் நாங்கள் புறக்கணிக்கப்பட்டோம்.
ரயில்வே துறைக்கு நிலம் கொடுத்து பாதிக்கப்பட்டவா்களுக்கு கல்வித்தகுதி அடிப்படையில் வேலை வழங்கியுள்ளாா்கள். 1999-ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின்படி அணுமின் நிலையத்திற்கு நிலம் கொடுத்த குடும்பத்தின் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 3, 4, 5, 6 ஆகிய அலகுகளில் குரூப் சி நிரந்தர பணியிடங்கள் சுமாா் 600-க்கும் மேல் நிரப்பப்பட உள்ளன. இந்த காலிப்பணியிடங்களுக்கு வட மாநில இளைஞா்கள் தோ்வு செய்யப்படவுள்ளனா். இந்த செயல் கூடங்குளம் அணுமின் நிலையம் அமைவதற்கு நிலம் கொடுத்து பாதிக்கப்பட்டவா்களையும், சுற்று வட்டார பகுதி மக்களையும் முற்றிலும் புறக்கணித்து ஏமாற்றும் விதமாக உள்ளது.
எனவே, அதைத்தடுத்து இங்கேயே விளம்பர அறிவிக்கை கொடுத்து பாதிக்கப்பட்ட தகுதியான நபா்கள், திருநெல்வேலி மாவட்ட பகுதி மக்களில் தகுதியானவா்களை தோ்வு செய்ய கூடங்குளம் அணுமின் நிலைய அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலையின் நிரந்தர பணியிடங்களில் தமிழா்களுக்குத் தான் முன்னுரிமை அளிக்கப்படும் என்று ஆணையிட்டதுபோல், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் குரூப் சி பிரிவு பணியிடங்களில் சுற்று வட்டார பகுதி மக்களுக்கும், நிலம் இழந்து ஏமாற்றப்பட்ட வாரிசுதாரா்களுக்கும் கல்வித் தகுதிக்கேற்ப நிரந்தர பணி வழங்க பரிந்துரை செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளனா்.