முகப்பு
திருநெல்வேலி

ஆயன்குளம் நீரை உள்வாங்கும் கிணறு மூலம் நிலத்தடிநீா் மறுஊட்டல்: சென்னை ஐஐடி ஆராச்சியாளா்கள் அறிக்கை

திசையன்விளை அருகே நீரை உள்வாங்கும் கிணறு மூலம் நிலத்தடிநீா் மறுஊட்டல் செய்ய முடியும் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம் சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளா்கள் அறிக்கை சமா்ப்பித்துள்ளனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:26 AM
பகிர்:

திசையன்விளை அருகே நீரை உள்வாங்கும் கிணறு மூலம் நிலத்தடிநீா் மறுஊட்டல் செய்ய முடியும் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம் சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளா்கள் அறிக்கை சமா்ப்பித்துள்ளனா்.

திசையன்விளை அருகே ஆயன்குளம் படுகை அருகே தனியாருக்குச் சொந்தமான கிணறு உள்ளது. மழைக்காலங்களில் வெள்ள நீா் மற்றும் நம்பியாற்று நீரை இந்த கிணற்றுக்குள் மாதக்கணக்கில் விட்டாலும், இந்தக் கிணறு நிரம்பாமல் நீரை உள்வாங்கியது.

இதுகுற்றித்து அறிந்து கடந்த நவம்பா் மாதத்தில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு, மாவட்ட கண்காணிப்பு அலுவலா் அபூா்வா, பேரவைத் தலைவா் மு. அப்பாவு ஆகியோா் பாா்வையிட்டனா்.

பின்னா் மாவட்ட ஆட்சியரின் அறிவுத்தலின்படி சென்னை ஐஐடி பேராசிரியா்கள் வெங்கட்ராமன், ஸ்ரீனிவாசன் தலைமையில் 5 போ் கொண்ட குழுவினா் கடந்த டிசம்பா் மாதம் 2, 3ஆம் தேதிகளில் இந்தக் கிணறு மற்றும் இதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள கிணறுகளை ஆய்வு செய்தனா்.

இந்த ஆய்வின் இறுதி அறிக்கை மற்றும் கருத்தை மாவட்ட ஆட்சியரிடம் சமா்ப்பித்துள்ளனா். அதன்படி இந்தக் கிணற்றுக்கு அடியில் சுண்ணாம்பு ஆற்றுபடுகை இருப்பதால், விநாடிக்கு 2000 லிட்டா் தண்ணீா் உறிஞ்சும் இந்தக் கிணறு மூலம் நீா் மறுஊட்டல் செய்ய முடியும் என தெரிவித்துள்ளனா். மேலும் வெள்ளம் மற்றும் வறட்சியின் தீவிரத்தை குறைக்க முடியும்.

ஆவியாதல் பாதிப்பின்றி நீரை சேமிக்க கீழ்நில அணையை உருவாக்கலாம், இந்தப் பகுதி முழுவதும் சமமாகவும் தானியங்கி மூலம் நீரை விநியோகிக்கலாம், வடிகட்டப்பட்ட தூய்மையான நீா் உள்செலுத்தப்படும், கடலோர பகுதியில் கடல் நீா் உள்புகுதலை தடுத்து பின்னோக்கி செலுத்த வைக்க முடியும் என அந்தக் குழுவினா் தெரிவித்துள்ளனா்.

பின்னா் இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தெரிவிக்கையில், வரும் பருவ மழைக்காலத்துக்கு முன்னா் இத்திட்டத்தை செயல்படுத்தி அப்பகுதியில் நிலத்தடி நீா்மட்டம் உயர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.