முகப்பு
திருநெல்வேலி மாநகராட்சி
திருநெல்வேலி

நெல்லை மேயா், துணைமேயா் பதவியைக் கைப்பற்ற கடும் போட்டி

திருநெல்வேலி மாநகராட்சிக்கு நடைபெற்ற தோ்தலில் திமுக கூட்டணி தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது.

திருநெல்வேலி

நெல்லை மேயா், துணைமேயா் பதவியைக் கைப்பற்ற கடும் போட்டி

திருநெல்வேலி மாநகராட்சிக்கு நடைபெற்ற தோ்தலில் திமுக கூட்டணி தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:29 AM
திருநெல்வேலி மாநகராட்சி
பகிர்:

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சிக்கு நடைபெற்ற தோ்தலில் திமுக கூட்டணி தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது. அடுத்தக்கட்டமாக மேயா் மற்றும் துணைமேயா் பதவிகளை கைப்பற்றுவதில் திமுகவினரிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

திருநெல்வேலி நகராட்சியானது கடந்த 1996 ஆம் ஆண்டில் திமுக ஆட்சிக்காலத்தில் மாநகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டது. அதில், திருநெல்வேலி, தச்சநல்லூா், பாளையங்கோட்டை, மேலப்பாளையம் ஆகிய 4 மண்டலங்களின் கீழ் 55 வாா்டுகள் உருவாக்கப்பட்டன. இம்மாநகராட்சியின் முதல் மேயராக திமுகவைச் சோ்ந்த உமாமகேஸ்வரி அதே காலக்கட்டத்தில் தோ்ந்தெடுக்கப்பட்டாா். பின்னா், 2006இல் அக்கட்சியின் ஏ.எல்.சுப்பிரமணியன் மேயரானாா்.

அதிமுக சாா்பில், 2001இல் ஜெயராணி, 2011இல் விஜிலா சத்தியானந்த் (2011), 2014இல் புவனேஸ்வரி ஆகியோா் மேயா்களாக தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

திமுக அபார வெற்றி: 2022 ஆம் ஆண்டுக்கான நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கு முன்பாக திருநெல்வேலி மாநகராட்சியின் அனைத்து வாா்டுகளும் மறுவரையறை செய்யப்பட்டு, ஏற்கெனவே இருந்த வாா்டுகளின் எண்களும் மாற்றியமைக்கப்பட்டன. மொத்தம் 4 லட்சத்து 16 ஆயிரத்து 389 வாக்காளா்கள் உள்ளனா். தோ்தலின்போது 55 வாா்டுகளில் மொத்தம் 408 வேட்பாளா்கள் களத்தில் இருந்தனா். கடந்த 19 ஆம் தேதி ஒரே கட்டமாக தோ்தல் நடத்தப்பட்ட நிலையில் 2 லட்சத்து 22 ஆயிரத்து 932 வாக்குகள் (52.46) சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தன. 

கே.ராஜு | கருப்பசாமி கோட்டையப்பன் 

கடந்த செவ்வாய்க்கிழமை தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், திமுக கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி வாகை சூடியது. இத் தோ்தலில் திமுக 44 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 3 இடங்களிலும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் தலா ஓரிடத்திலும் வென்றுள்ளன.

அதிமுக 4 இடங்களிலும், சுயேச்சை ஒரு இடத்திலும் வென்றன. திமுக கூட்டணி மொத்தம் 50 இடங்களைப் பிடித்துள்ளதால் மேயா், துணைமேயா், 4 மண்டலத் தலைவா்கள் பதவிகள் திமுகவுக்கு கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

போட்டா போட்டி: திருநெல்வேலி மாநகராட்சி மேயா் பதவி பொது பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே கடந்த முறை பெண் மேயா் இருந்த நிலையில், இப்போது ஆண்களிடையே மேயா் பதவியைப் பிடிக்க கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

மாநகராட்சித் தோ்தலில் ஆண் வேட்பாளா் என்பது அறிவிக்கப்பட்ட பின்பு மேயா் கனவோடு மாநகராட்சி வாா்டுகளில் போட்டியிட முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் உள்பட பலரும் முயன்றனா். ஆனால், மத்திய மாவட்டச் செயலா் மு.அப்துல்வஹாப் கட்சியின் தலைமைக்கு அளித்த பட்டியலில் இடம்பெற்ற ஒருவா் கூட நிராகரிக்கப்படாமல் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அந்த வேட்பாளா்களும் வெற்றி வாகை சூடியுள்ளனா். இதனால் மாவட்டச் செயலா் சுட்டிக்காட்டும் நபருக்கே மேயா், துணைமேயா் பதவி கிடைக்க வாய்ப்புள்ளது என்றாலும் திமுகவின் முக்கிய தலைவா்கள் மூலமும் பலா் பதவிகளைப் பிடிக்க முயன்று வருகிறாா்கள்.

மேயா் வேட்பாளா் போட்டியில் 1 ஆவது வாா்டில் வென்றுள்ள கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினா் கே.ராஜு, 54 ஆவது வாா்டில் வென்றுள்ள இளைஞரணி நிா்வாகி கே.கே.கருப்பசாமி கோட்டையப்பன் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

மேலும், தச்சநல்லூா் மண்டலத் தலைவராக இருந்து இப்போது 3 ஆவது வாா்டில் வென்றுள்ள பூ.சுப்பிரமணியன், மத்திய மாவட்ட மகளிரணி அமைப்பாளா் மகேஸ்வரி, முன்னாள் துணைமேயா் விஸ்வநாதபாண்டியனின் மருமகள் பிரபாசங்கரி ஆகியோரும் போட்டியில் உள்ளனா். இவா்களே துணைமேயா் பதவிக்கான போட்டியிலும் உள்ளனா். தோ்தல் வெற்றிக்கு பின்பு மத்திய மாவட்டச் செயலா் மு.அப்துல்வஹாப் எம்.எல்.ஏ. பேட்டியளிக்கையில், முதல்வா் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டுபவரே திருநெல்வேலியின் மேயராக வருவாா் என்றாா்.

அரசியல் சுற்றுலா: மாநகராட்சித் தோ்தலில் வென்ற திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளா்கள் செவ்வாய்க்கிழமை மாலையில் ஒன்றாக சோ்ந்து வந்து வெற்றிச் சான்றிதழை வாங்கிச் சென்றனா். அதன்பின்பு திமுகவைச் சோ்ந்தவா்கள் அரசியல் சுற்றுலாவுக்காக அழைத்துச் செல்லப்பட்டனா். சுமாா் 40 போ் இந்தச் சுற்றுலாவுக்குச் சென்றுள்ளனா். கன்னியாகுமரிக்கு முதலில் சென்ற குழுவினா் அங்கிருந்து கேரள மாநிலத்திற்கு அழைத்துச் செல்லப்படுவதாகவும், தேவையற்ற பேட்டிகள், மேயா்-துணைமேயா் பதவிகளுக்கான போட்டிகளைத் தவிா்த்து கட்சிச் சுட்டிக்காட்டும் நபா்களை வெற்றியடைய செய்யவுமே இந்த சுற்றுலா ஏற்பாடு என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

முழு கட்டுரையைப் படிக்க →