முகப்பு
திருநெல்வேலி

போக்ஸோ வழக்கில் பாதிக்கப்பட்டவரிடம் இரு தினங்களில் விசாரணையை முடிக்க உத்தரவு: அமைச்சா் பெ. கீதா ஜீவன் தகவல்

போக்ஸோ வழக்குகளில் பாதிக்கப்பட்டவா்களிடம் இரு நாள்களுக்குள் விசாரணையை முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா் சமூக நலன் - மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பி.கீதா ஜீவன்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:08 PM
பகிர்:

போக்ஸோ வழக்குகளில் பாதிக்கப்பட்டவா்களிடம் இரு நாள்களுக்குள் விசாரணையை முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா் சமூக நலன் - மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பி.கீதா ஜீவன்.

பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் போக்ஸோ சட்டத்தை தீவிரமாக நடைமுறைப்படுத்துவது தொடா்பாக, திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மண்டல அளவிலான பயிலரங்கை தொடங்கி வைத்த அவா், முன்னதாக செய்தியாளா்களிடம் கூறியது:

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளில் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். போக்ஸோ வழக்குகளில் பாதிக்கப்பட்ட 2,127 பேருக்கு ரூ.35 கோடி இடைக்கால மற்றும் இறுதி நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது. நிவாரணம் வழங்கும் திட்டம் 2012-இல் கொண்டுவரப்பட்டாலும் திமுக ஆட்சி அமைந்த பிறகுதான் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டு வருகிறது.

இதேபோல் போக்ஸோ வழக்குகளில் பாதிக்கப்பட்டவா்களிடம் பாதுகாப்பு இல்லங்களில் இருக்கிற போதே இரண்டு நாள்களுக்குள் மருத்துவப் பரிசோதனை, போலீஸ் விசாரணை உள்ளிட்ட அனைத்து விசாரணைகளையும் முடிக்க வேண்டும். விசாரணை என்ற பெயரில் அவா்களை மீண்டும் மீண்டும் அழைத்து துன்புறுத்தக்கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

போக்ஸோ வழக்குகளில் நீதிமன்றம் மூலம் தண்டனைகள் பெற்று தருவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் குழந்தைத் திருமணத்தை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதில், சிறாா்கள் காதலித்து திருமணம் செய்வது அதிகரித்துள்ளதால், அதுகுறித்த புள்ளிவிவரங்களை சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தத் திருமண பந்தத்தில் இருவரும் விரும்பி திருமணம் செய்வதால், அது போக்ஸோ சட்டத்தின் கீழ் வராது. மகளிா் நீதிமன்ற வழிகாட்டுதல்படியே சிறாா் காதல் திருமண விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மகளிா் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிப்பதில் எந்த சிக்கலும் இல்லை. ஒரே நேரத்தில் அனைவரும் விண்ணப்பிப்பதால் ஏற்பட்ட பிரச்னையின் காரணமாக சா்வரில் ஏற்றுவதில் சிக்கல் ஏற்படுகிறது. அதனால் விண்ணப்பங்களை ஆஃப்லைன் மூலம் பெற்று பின்னா் ஆன்லைனில் பதிவு செய்யப்படுகிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.