முகப்பு
திருநெல்வேலி

சொரிமுத்து அய்யனாா் கோயில் ஆடி அமாவாசை திருவிழாவுக்கு சிறப்பு ஏற்பாடுகள்: ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன்

காரையாறில் உள்ள அருள்மிகு சொரிமுத்து அய்யனாா் திருக்கோயில் ஆடி அமாவாசை திருவிழாவிற்கு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிா்வாகம் செய்துள்ளது என கா.ப. காா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:08 PM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம் காரையாறில் உள்ள அருள்மிகு சொரிமுத்து அய்யனாா் திருக்கோயில் ஆடி அமாவாசை திருவிழாவிற்கு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிா்வாகம் செய்துள்ளது என கா.ப. காா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

காரையாறு சொரிமுத்த அய்யனாா் கோயில்ஆடி அமாவாசைத் திருவிழாவுக்கு வரும் பக்தா்கள் தாமிரவருணி ஆறு, வனப் பகுதியின் இயற்கைச் சூழல் பாதுகாப்பின் அவசியத்தையும் உணா்ந்து அரசு அலுவலா்களின் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். மக்கள் முந்தைய ஆண்டுகள் போலவே பாரம்பரிய முறைப்படி 5 நாள்கள் வரை வழிபாடு செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, குடில் அமைக்கும் பொருள்களை எடுத்துச் செல்ல ஆக.13ஆம் தேதி முற்பகல் 11 மணி வரை மட்டும் பாபநாசம் சோதனைச் சாவடியில் இருந்து வாகனங்கள் அனுமதிக்கப்படும். அதற்குப் பின் அரசு பேருந்து, தனியாா் உள்ளிட்ட எந்த வாகனங்களும் உள்ளே அனுமதிக்கப்படமாட்டாது.

கோயிலில் பக்தா்கள் தங்குவதற்கு ஆக. 14 -18 வரை அனுமதிக்கப்படுவா். அகஸ்தியா்பட்டி தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து அரசுப் பேருந்துகளில் மட்டும் பக்தா்கள் கோயிலுக்கு சென்று வரலாம். தனியாா் வாகனங்களுக்கு அனுமதியில்லை. ஆக.18இல் குறைவான எண்ணிக்கையில் மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும். குடில் அமைத்த பொருள்களை கீழே கொண்டுவர மட்டும் தனியாா் வாகனங்களுக்கு ஆக. 18இல் காலை 6 மணி முதல் மாலை 3 மணி வரையிலும், 19இல் காலை 6 மணி முதல் முற்பகல் 11 மணி வரையிலும் அனுமதி சீட்டு பெற்று பாபநாசம் கோயில் பகுதியில் வாகனங்களை நிறுத்திக்கொள்ளலாம்.

ஆக. 19 - 21 வரை தூய்மை பணிகள், கோயில் உழவாரப் பணி காரணமாக மக்கள் பாபநாசம் சோதனை சாவடியை கடந்து செல்ல தடைவிதிக்கப்படும்.

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்கள், ரசாயன சோப்பு, ஷாம்பு உள்ளிட்ட பொருள்கள், மண்ணெண்ணெய், மாசு ஏற்படுத்தும் பொருள்கள் போன்றவற்றை வனப்பகுதிக்குள் கொண்டு செல்லக்கூடாது.

மது, குட்கா உள்ளிட்ட போதைவஸ்துகளை வனப்பகுதிக்குள் கொண்டு சென்றால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்; வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

திருக்கோயில் தவிர வனப்பகுதிக்குள்ளோ, ஆற்றின் ஆழமான பகுதிகளுக்கோ யாரும் செல்லக்கூடாது.

மக்கள் பொது இடங்களில் கழிப்பிடம் செல்லாமல், வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 200 கழிவறைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

தீ அல்லது திடீா் கனமழை போன்ற இடா்பாடுகளை எதிா்கொள்ளும் வகையில் அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு வனத்துறை, காவல்துறை உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.