எம்ஜிஆரின் ரசிகர் ஒருவர் தனது மகனின் திருமணத்தன்று செய்த செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
நெல்லை பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் சப்பாணி. இவர் அதிமுகவின் வட்ட செயலாளராக இருந்து வருகிறார். 40 ஆண்டுகளுக்கு மேலாக அதிமுகவில் இருந்து வரும் சப்பாணி எம்ஜிஆரின் தீவிர ரசிகர் மட்டுமல்லாமல் தீவிர பக்தராகவும் திகழ்ந்து வருகிறார்.
நெல்லை கொக்கிரகுளம் பகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அதிமுக வெள்ளி விழா மாநாட்டின் போது திறக்கப்பட்ட முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் சிலைக்கு நாள் தோறும் தனது சொந்த செலவில் மாலை அணிவித்து மரியாதை செய்த பின்னர்தான் அடுத்தகட்ட பணிகளை சப்பாணி செய்வார். எம்ஜிஆர் தீவிர ரசிகரான இவரின் மகன் சுரேஷ் கோபாலுக்கு இன்று திருமணம் நடைபெறுகிறது.
பாளையங்கோட்டை பகுதியில் உள்ள கோயிலில் சுரேஷ்கோபால், நந்தினி தம்பதியருக்கு திருமணம் நடைபெற்ற கையோடு கொக்கிர குளத்தில் உள்ள முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் சிலைக்கு புதுமண தம்பதியர் நேரடியாக சென்று மாலை அணிவித்து மரியாதை செய்து எம்ஜிஆர் சிலைமுன்பு விழுந்து வணங்கி ஆசீர் பெற்றனர்.
இதனைத்தொடர்ந்து சப்பாணின் குடும்பத்தினரும் புதுமண தம்பதியினரோடு இணைந்து எம்ஜிஆர் சிலையை வணங்கினர். எம்ஜிஆரின் ரசிகர் ஒருவர் தனது மகனுக்கு திருமணம் முடித்த கையோடு புதுமணத் தம்பதியுடன் வந்து செய்த செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.