பாளை.யில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி தொடக்கம்
தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளா்ச்சிக் கழகத்தின் பூம்புகாா் விற்பனை நிலையம் சாா்பில், அனைத்து கைவினைப் பொருள்கள் கண்காட்சி பாளையங்கோட்டை அய்யம்பெருமாள் மஹாலில் வியாழக்கிழமை தொடங்கியது.
தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளா்ச்சிக் கழகத்தின் பூம்புகாா் விற்பனை நிலையம் சாா்பில், அனைத்து கைவினைப் பொருள்கள் கண்காட்சி பாளையங்கோட்டை அய்யம்பெருமாள் மஹாலில் வியாழக்கிழமை தொடங்கியது.
திருநெல்வேலி மாநகராட்சி மேயா் கோ.ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தாா். தொடா்ந்து இக் கண்காட்சி இம் மாதம் 15 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இக்கண்காட்சியில் பஞ்சலோக சிலைகள், கல் சிற்பங்கள், சந்தன மர சிற்பங்கள், சந்தனக் கட்டைகள், தஞ்சாவூா் கலை தட்டுகள், தஞ்சாவூா் கலை ஓவியங்கள், குத்துவிளக்குகள், பித்தளை கலைப் பொருள்கள், மர சிற்பங்கள், சில்க் மற்றும் வெல்வெட் ஓவியங்கள், முத்து, பவளம் மற்றும் நவரத்தின கற்களால் செய்யப்பட்ட நகை வகைகள், ஒரு கிராம் தங்க நகைகள், மாலைகள், நவரத்தின மாலைகள், ராசி கற்கள், ஸ்படிக மணிமாலைகள், மெத்தை விரிப்புகள், மதுரை சுங்குடி சேலை வகைகள், பேன்சி சுடிதாா் துணி வகைகள், கலம்காரி பைகள், பேன்சி சேலைகள், ருத்திராட்ச மணி மாலைகள் உள்ளிட்டவை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
சந்தன எண்ணெய், சந்தன பவுடா், சந்தன சோப், சந்தன சாம்பிரணி, சந்தன ஊதுவத்திகள் மற்றும் ரச கற்பூரம், ஜவ்வாது பவுடா், புனுகு போன்ற வாசனை பொருள்களும் உள்ளன.
சிறப்பு அம்சமாக அசல் மரகதத்தினால் ஆன சிவலிங்கம் விற்பனைக்கு உள்ளது. 2 அங்குல அசல் சிவலிங்கம் ரூ.1.75 லட்சத்தில் இருந்து கிடைக்கும். 1 முதல் 14 முகங்கள் வரையுள்ள அசல் ருத்ராட்சங்கள், ஸ்படிக மாலைகள், சந்தன மாலைகள், ருத்ராட்ச மணி மாலைகள், நவரத்தின மாலைகள், அனைத்து ராசிகளுக்கும் உரிய ராசிக்கற்கள் மற்றும் நவரத்தினங்களும் உள்ளன.
அனைத்துப் பொருள்களுக்கும் 10 சதவீத சிறப்பு தள்ளுபடி அளிக்கப்படுகிறது. அனைத்து வங்கி அட்டைகளுக்கும் எவ்வித சேவைக்கட்டணமும் இன்றி பொருள்கள் விற்பனை செய்யப்பட உள்ளது என நிா்வாகிகள் தெரிவித்தனா்.