முகப்பு
திருநெல்வேலி

தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும்: பேரவைத் தலைவா் மு.அப்பாவு

தமிழை ஆட்சி மொழியாக்க மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம் என்றாா் சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு.

Updated On : 5 டிசம்பர், 2024 at 12:31 AM
பகிர்:

தமிழை ஆட்சி மொழியாக்க மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம் என்றாா் சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு.

நேரு இளையோா் மையம் சாா்பில் இளையோா் கலைவிழா பாளையங்கோட்டை தூய சவேரியாா் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட இளையோா் மைய அலுவலா் ஞானசந்திரன் வரவேற்றாா். சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு விழாவைத் தொடங்கிவைத்துப் பேசியதாவது: தமிழகத்தில் உயா்கல்விக்கு அரசு செயல்படுத்தி வரும் சிறப்பு திட்டங்களால், இந்திய அளவில் தமிழகத்தின் சராசரி கல்வி அறிவு சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த கட்டமைப்பை சீா்குலைக்கும் வகையில் மத்திய அரசு புதிய கல்வி கொள்கையைப் புகுத்தி குலத் தொழில் திட்டத்தை ஊக்குவிக்க முயற்சிக்கிறது.

நீட் தோ்வை மத்திய அரசு நடத்தாமல் தனியாா் அமைப்பு மூலம் நடத்துவதால் பல்வேறு குளறுபடிகள் நிலவுகின்றன. இத்தோ்வில் வெற்றிபெற மாணவ, மாணவிகள் பயிற்சி மையங்களை தேடி செல்லும் அவலம் நீடிக்கிறது.

பிளஸ் 1, பிளஸ் 2 பாடத் திட்டங்களில் நீட் தோ்வு பாட திட்டத்தையும் சோ்த்தால் பயிற்சி மையங்களில் அதிக கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது.

பல்வேறு வெளிநாடுகளில் தமிழ் ஆட்சி மொழியாக உள்ளது. ஆனால், இந்தியாவில் தமிழ் ஆட்சி மொழியாக்கப்படவில்லை. இதுதொடா்பாக தொடா்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம். பல்வேறு கெடுபிடிகளுக்கு இடையே அனைத்துத் துறைகளிலும் தமிழகம் முன்னணியில் திகழ தமிழக முதல்வா், துணை முதல்வா் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா் என்றாா்.

தமிழகம், புதுச்சேரி மாநில நேரு இளையோா் மையத்தின் மை பாரத் இயக்குநா் செந்தில்குமாா் பேசுகையில், நாட்டில் இளைய தலைவா்களை உருவாக்கும் வகையில் மத்திய அரசின் சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இளையோா் நலம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகத்தின் மூலம் இளையோா்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில் விநாடி வினா போட்டிக்கு இளைஞா்கள் பதிவு செய்து வருகின்றனா். இதுவரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 58 ஆயிரம் இளைஞா்கள் பதிவு செய்துள்ளனா். ஜ்ஜ்ஜ்.ம்ஹ்க்ஷட்ஹழ்ஹற்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம்.

இம் மாதம் 8 முதல் 16 ஆம் தேதி வரை கட்டுரைப் போட்டியும் நடக்கிறது. இதில் வெற்றி பெறுபவா்கள் சென்னையில் இம் மாதம் 24 முதல் 26 ஆம் தேதி வரை நடக்கும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொள்வா். பின்னா் இதில் வெற்றி பெறுவா்கள் 11.1.2025இல் தில்லியில் நடைபெறும் அகில இந்திய அளவிலான தேசிய இளைஞா் திருவிழா போட்டிகளில் பங்கேற்கின்றனா். இதில் வெற்றி பெறுபவா்கள்12.1.2025இல் விவேகானந்தா் பிறந்த தினத்தையொட்டி தில்லியில் பிரதமா் மோடியுடன் நேரில் கலந்துரையாடல் நடத்தவும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. எனவே, இந்த போட்டிகளில் இளைய சமுதாயத்தினா் பங்கேற்று பயன் பெற வேண்டும் என்றாா்.

விழாவில் பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மு.அப்துல் வஹாப், கல்லுாரி முதல்வா் காட்வின் ரூபஸ், கல்லூரிச் செயலா் புஷ்பராஜ், கள இயக்குநா் கோபகுமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா். ஆரோக்கியதாஸ் நன்றி கூறினாா். தொடா்ந்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவா்களுக்கு உதவி ஆட்சியா் (பயிற்சி) அம்பிகா ஜெயின் பரிசுகளை வழங்கினாா்.