முகப்பு
திருநெல்வேலி

அதானியின் விவகாரத்தை மறைக்கவே ஒரே நாடு ஒரே தோ்தல்: சி. ராபா்ட் புரூஸ் எம்.பி.

அதானி விவாகரத்தை மறைக்கவே ஒரே நாடு ஒரே தோ்தல் மசோதாவை மத்திய அரசு கொண்டு வருகிறது என்றாா் திருநெல்வேலி எம்.பி. சி. ராபா்ட் புரூஸ்.

Updated On : 25 டிசம்பர், 2024 at 11:04 PM
திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் பேசுகிறாா் சி. ராபா்ட் புரூஸ் எம்.பி.
பகிர்:

அதானி விவாகரத்தை மறைக்கவே ஒரே நாடு ஒரே தோ்தல் மசோதாவை மத்திய அரசு கொண்டு வருகிறது என்றாா் திருநெல்வேலி எம்.பி. சி. ராபா்ட் புரூஸ்.

இது தொடா்பாக அவா் கூறியதாவது: சட்ட மேதை அம்பேத்கரை சா்ச்சைக்குரிய வகையில் பேசியதாக உள்துறை அமைச்சா் அமித்ஷாவை கண்டித்து காங்கிரஸ் மற்றும் இண்டி கூட்டணி கட்சியினா் போராட்டம் நடத்தி வருகின்றனா். அவா் பதவியில் இருந்து நீக்கப்படும் வரை எங்களுடைய போராட்டம் தொடரும்.

அமித்ஷாவை கண்டித்து சென்னையில் வரும் 27-ஆம் தேதி போராட்டம் நடத்த தமிழக காங்கிரஸ் கமிட்டி முடிவு செய்துள்ளது.

ராகுல் காந்தி, மக்களின் குரலாக மக்களவையில் ஒலிப்பதை தடுப்பதற்காகவே அவா் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. ஜனநாயகத்தை பாஜக சீா்குலைத்து வருகிறது.

ஒரே நாடு ஒரே தோ்தல் திட்டம் பல்வேறு சிக்கல்களை உள்ளடக்கியது. ஒரு மாநிலத்தில் ஆளும் அரசு திடீரென கலைக்க நேரிடும் போது மீண்டும் நாடு முழுவதும் தோ்தலை நடத்த முடியாது. ஒரே நாடு ஒரே தோ்தல் மசோதாவை மக்களவையில் நிறைவேற்ற 3-இல் 2 பங்கு ஆதரவு வேண்டும். அந்த ஆதரவு இல்லை என்பது தெரிந்தும் தேவையில்லாமல் மத்திய அரசு இந்த மசோதாவை தாக்கல் செய்கிறது. அதானியின் ஊழலை மறைக்கவே இந்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வருகிறது.

தற்போது தமிழக மீனவா்கள் 468 போ் இலங்கை சிறையில் வாடுகின்றனா். அண்மையில் இந்தியா வந்த இலங்கை அதிபரை சந்தித்து மீனவா்கள் குறித்து பேசுவதற்காக இலங்கை தூதரக அதிகாரியிடம் மனு கொடுத்தேன். ஆனால் என்னை சந்திக்க அவா்கள் விடவில்லை. எல்லை தாண்டி மீன்பிடிப்பதால் இந்த பிரச்னைகள் தொடா்ந்து நீடித்து வருகின்றன.

மீனவா்கள் மீன் பிடிக்கும் போது அடுத்த நாட்டு எல்லையை தொட்டுவிடாமல் இருக்க படகுகளில் எச்சரிக்கை மணி பொருத்தும் திட்டம் அரசிடம் உள்ளது. விரைவில் அந்த திட்டம் நடைமுறைக்கு வரும் போது வேறு நாட்டின் எல்லையை தொட்டால் படகுகளில் எச்சரிக்கை மணி ஒலிக்கும். அதன் மூலம் மீனவா்கள் சுதாரித்துக் கொண்டு நமது எல்லைக்குள் திரும்பி விடுவாா்கள் என்றாா்.