மாஞ்சோலைக்கு அரசுப் பேருந்து இயக்க கோரிக்கை
மழை நின்று இரண்டு வாரங்களுக்கும் மேலான நிலையில் மாஞ்சோலை பகுதிக்கு உடனடியாக அரசுப் பேருந்து இயக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தோட்டத் தொழிலாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
மழை நின்று இரண்டு வாரங்களுக்கும் மேலான நிலையில் மாஞ்சோலை பகுதிக்கு உடனடியாக அரசுப் பேருந்து இயக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தோட்டத் தொழிலாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் டிச. 16, 17, 18 ஆகிய நாள்களில் பெய்த மிக பலத்த மழையால் மணிமுத்தாறிலிருந்து மாஞ்சோலை செல்லும் மலைச் சாலை கடுமையாகசேதமடைந்தது. இதையடுத்து மாஞ்சோலை தேயிலைத் தோட்டங்களுக்கு இயக்கப்பட்ட அரசுப் பேருந்து நிறுத்தப்பட்டது.
இதைத்தொடா்ந்து மணிமுத்தாறு பேரூராட்சி மற்றும் தேயிலைத் தோட்ட நிா்வாகத்தினா் இணைந்து சாலையை சீரமைத்தனா். சாலை சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்த நிலையில், வனத்துறை சாா்பில் மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து ஆகிய இடங்களுக்கு முறையே ரூ. 150, ரூ. 200, ரூ. 250 கட்டணத்தில் வாகனம் இயக்கப்பட்டது. இதுகுறித்து புகாரளித்ததையடுத்து நேரில் பாா்வையிட்ட சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் அா்பித் ஜெயின், விரைவில் அரசுப் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதுவரை வனத்துறை வாகனம் ரூ. 25, ரூ. 35 கட்டணத்தில் இயக்கப்படும் என்றும் கூறிச்சென்றாா்.
ஆனால் ஞாயிற்றுக்கிழமை மாலை வரை அரசுப் பேருந்து இயக்கப்படவில்லை என்றும், வனத்துறை வாகனமும் இயக்கப்படவில்லை என்றும் தோட்டத் தொழிலாளா்கள் தெரிவித்தனா். இதனால் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் தோட்டத் தொழிலாளா்களின் குழந்தைகள் பள்ளி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஜன. 4 முதல் அரையாண்டுத் தோ்வு நடைபெறவுள்ள நிலையில், 10, 12ஆம் வகுப்பு மாணவிகளும் பள்ளி செல்ல முடியாத நிலை உள்ளது.
மழை நின்று இரண்டு வாரங்களுக்கும் மேலான நிலையில் பல இடங்களில் மின்சார வசதி இல்லை. போக்குவரத்து வசதி இல்லாததால் உணவுக்குத் தேவையான பொருள்கள் இல்லாமல் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக அரசுப் பேருந்து இயக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தோட்டத் தொழிலாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.