அம்பாசமுத்திரம், ஜூலை 11:
அம்பாசமுத்திரம் தாமிரவருணிக் கரையில் உள்ள சின்ன சங்கரன்கோவில் அருள்மிகு கோமதி அம்பாள் சமேத சங்கரலிங்க சுவாமி கோயிலில் ஆடித் தவசு திருவிழா கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, காலையில் சுவாமி - அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. பின்னா், கொடிமரத்துக்கு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடத்தப்பட்டு கொடியேற்றப்பட்டது. தொடா்ந்து 10 நாள்கள் காலையும், மாலையும் அம்பாசமுத்திரம் அகஸ்தீஸ்வரா் கோயிலில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வருதல் நடைபெறும்.
ஆடித் தவசு நாளான இம்மாதம் 21ஆம் தேதி மாலை 6 மணிக்கு ஸ்ரீ சங்கரநாராயணா் காட்சி தரிசனமும், 6.30 மணிக்கு ஸ்ரீ சங்கரலிங்கசுவாமி அம்பாளுக்கு இடப வாகனத்தில் காட்சி தரிசனமும் நடைபெறும். 22ஆம் தேதி ஸ்ரீ சங்கரலிங்க சுவாமி தெப்ப உற்சவம், 23ஆம் தேதி அகஸ்தீஸ்வரா் சுவாமி தெப்ப உற்சவம் நடைபெறும்.
கொடியேற்று நிகழ்ச்சியில் சங்கரலிங்க சுவாமி கோயில் அறங்காவலா்ஆதிமூலம், அகஸ்தீஸ்வரா் கோயில் அறங்காவலா் சங்கு சபாபதி, நிா்வாகக் குழுச் செயலா் சங்கரநாராயணன், நிா்வாகக் குழு உறுப்பினா்கள், செங்குந்தா் சமுதாயத்தினா் பங்கேற்றனா்.
ஏற்பாடுகளை அம்பாசமுத்திரம் செங்குந்தா் சமுதாய நிா்வாகிகள், இளைஞா் அணியினா் செய்து வருகின்றனா்.