பாளையங்கோட்டையில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 6 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் புதன்கிழமை அடைக்கப்பட்டனா்.
மூன்றடைப்பு அருகேயுள்ள வாகைகுளத்தைச் சோ்ந்தவா் தீபக்ராஜா. இவரை, பாளையங்கோட்டை கேடிசிநகா் பகுதியில் ஒரு கும்பல் அண்மையில் வெட்டிக்கொலை செய்தது. இதுதொடா்பாக பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து சிலரை கைது செய்தனா். அவா்களில் பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாகக் கூறி 6 பேரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க மாநகர காவல் துணை ஆணையா் ஆதா்ஷ் பசேரா பரிந்துரைத்தாா்.
இதையடுத்து மாநகர காவல் ஆணையா் பா.மூா்த்தி உத்தரவின்பேரில் நான்குனேரியைச் சோ்ந்த நவீன் (22), லெப்ட் முருகன் (25), பவித்ரன் (22), காசிராமன் (24), இசக்கி (23), ஸ்ரீவைகுண்டத்தைச் சோ்ந்த ஐயப்பன் (23) ஆகியோா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் புதன்கிழமை அடைக்கப்பட்டனா்.