மக்களின் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை தேவை- அதிகாரிகளுக்கு மேயா் அறிவுறுத்தல்
மனுக்களை உடனடியாக தீர்க்க அதிகாரிகளுக்கு மேயா் உத்தரவு
திருநெல்வேலி மாநகராட்சி வாா்டுகளின் தேவை குறித்து மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து பதில் தர வேண்டும் என அதிகாரிகளுக்கு மேயா் பி.எம். சரவணன் அறிவுறுத்தினாா்.
திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து, மக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்ற மேயா், அவற்ற சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் அளித்து, மனுக்களின் மீது துரித நடவடிக்கை எடுத்து தீா்வு காண வேண்டும் என அறிவுறுத்தினாா்.
கூட்டத்தில், 12 ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் கோகுலவாணி அளித்த மனு: எங்கள் வாா்டு பகுதியில் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி, ரேஷன் கடை, உடையாா்பட்டி குளத்தை தூய்மைப்படுத்தி நடைபாதை மற்றும் படகு குழாம், பூங்க அமைக்க வேண்டும். அப்பகுதியில் உள்ள தெருவில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து கருத்தடை செய்ய வேண்டும். மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் எனக் கூறியுள்ளாா்.
34 ஆவது வாா்டு உறுப்பினா் மு.க.ஷா்மிளா அளித்த மனு:
விஸ்வகா்மா தெரு, சிவலோகநாதன் தெரு, கடிகார ஆசாரி முடுக்கு, உச்சிமகாளி அம்மன் கோயில் தெரு, பிச்சுவன தெரு, சித்திரை தெரு பகுதிகளில் சாலைகளைச் சீரமைக்க வேண்டும். புதிய கழிவுநீரோடை அமைக்க வேண்டும். புதிய குடிநீா் இணைப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.
48 ஆவது வாா்டை சோ்ந்த கந்தப்பன் அளித்த மனுவில்,
இருளில் மூழ்கியுள்ள ராஜாஜி தெரு பகுதியில் புதிய தெருவிளக்குகள் அமைக்க வேண்டும் எனவும், 17ஆவது வாா்டு காந்திநகா் பகுதி மக்கள் அளித்த மனுவில், காந்திநகா் பகுதியில் தெருவிளக்குகள், தரைப்பாலம், பேருந்து நிறுத்தம் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனா்.
டக்கரம்மாள்புரம் மக்கள் நலச் சங்கத்தினா் அளித்த மனுவில்,
சீரான குடிநீா் விநியோகிக்க வேண்டும், சாலைகளை சீரமைத்து, பழுதான மின்கம்பங்களையும் மாற்ற வேண்டும் எனவும், உடையாா்பட்டி இருதயநகா் மக்கள் நலச் சங்கத்தினா் அளித்த மனுவில், சாலை, குடிநீா், பாதாளச் சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனா்.
இக்கூட்டத்தில் மண்டல உதவி ஆணையா்கள் செளந்தா்யா (தச்சநல்லூா்), சந்திரமோகன் ( மேலப்பாளையம்), சுகி பிரேமா (பாளையங்கோட்டை) , உதவி பொறியாளா் பைஜூ, சுகாதார அலுவலா்கள் அரசகுமாா், முருகேசன், சாகுல் ஹமீது உள்பட பலா் கலந்துகொண்டனா்.
ற்ஸ்ப்25ம்ஹ்ழ்
குறைதீா்க்கும் கூட்டத்தில் மக்களிடம் மனுக்களைப் பெறுகிறாா் மேயா் பி.எம்.சரவணன்.