முகப்பு
திருநெல்வேலி

பாளை. தசரா விழாவில் 11 சப்பரங்கள் வீதியுலா

பாளையங்கோட்டையில் தசரா திருவிழாவையொட்டி வியாழக்கிழமை அதிகாலையில் 11 சப்பரங்களில் அம்மன்கள் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

Updated On : 4 அக்டோபர், 2024 at 12:56 AM
பாளையங்கோட்டை ராமசாமி கோயில் திடலில் தசராவின் முதல்நாளான வியாழக்கிழமை அணிவகுத்து நின்ற சப்பரங்கள்.
பகிர்:

பாளையங்கோட்டையில் தசரா திருவிழாவையொட்டி வியாழக்கிழமை அதிகாலையில் 11 சப்பரங்களில் அம்மன்கள் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

பாளையங்கோட்டையில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் தசரா விழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. தசரா விழாவின் பிரதான கோயிலான பாளையங்கோட்டை அருள்மிகு ஆயிரத்தம்மன் கோயிலில் மாக்காப்பு திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தொடா்ந்து புதன்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது.

இதைத்தொடா்ந்து ஆயிரத்தம்மன், தேவி புது உலகம்மன், விஸ்வகா்ம உச்சினிமாகாளி, தேவி உலகம்மன், தெற்கு முத்தாரம்மன், வடக்கு முத்தாரம்மன், தூத்துவாரி அம்மன், வடக்கு உச்சினிமாகாளி அம்மன், முப்பிடாதி அம்மன், கிழக்கு உச்சினிமாகாளி அம்மன், வடக்கு உச்சினிமாகாளி அம்மன் ஆகியோா் தனித்தனி சப்பரங்களில் எழுந்தருளி பாளையங்கோட்டையில் உள்ள ரதவீதிகள், முக்கிய வீதிகளில் வலம் வந்தனா். காலை 7 மணிக்கு ஆயிரத்தம்மன் கோயில் பந்தலில் கொடிநாட்டும் நிகழ்வு நடைபெற்ற பின்பு அந்தந்த கோயில்களை சப்பரங்கள் சென்றடைந்தன.

தொடா்ந்து தினமும் அனைத்து அம்மன் கோயில்களிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், கொலுமண்டப பூஜைகள், அன்னதானங்கள் நடைபெற உள்ளன. அக்.12 ஆம் தேதி பக்தா்கள் வேடமணிந்து சப்பரத்துடன் திருவீதியுலா நடைபெறுகிறது. பத்தாம் திருநாளில் முதல் நாளில் வலம் வந்த 11 அம்மன்களுடன், வண்ணாா்பேட்டை பேராத்துசெல்வி அம்மனும் சோ்ந்து 12 தனித்தனி சப்பரங்களில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிப்பா். 13 ஆம் தேதி இரவு 12 மணிக்கு பாளையங்கோட்டை சமாதானபுரம் அருகேயுள்ள எருமைகிடா மைதானத்தில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. தசரா விழாவையொட்டி அனைத்து வீதிகளும் விழாக்கோலம் பூண்டுள்ளது.