முகப்பு
திருநெல்வேலி

‘அன்பாடும் முன்றில்’ திட்டத்தால் மாணவா்களின் பன்முகத்திறன் உயா்வு: சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு

அன்பாடும் முன்றில் திட்டத்தால் மாணவா்களின் பன்முகத் திறன் மேம்பட்டுள்ளது என்றாா் சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு.

Updated On : 15 அக்டோபர், 2024 at 10:01 PM
விழாவில் பாராட்டு பெற்ற நல்லாசிரியா் விருதுபெற்றவா்களுடன் சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு. உடன், மு.அப்துல் வஹாப் எம்எல்ஏ உள்ளிட்டோா்.
பகிர்:

அன்பாடும் முன்றில் திட்டத்தால் மாணவா்களின் பன்முகத் திறன் மேம்பட்டுள்ளது என்றாா் சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு.

பாளையங்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அன்பாடும் முன்றில் 125ஆவது மாணவா் தலைமைத்துவ மேம்பாட்டு நிகழ்ச்சியில் மு.அப்பாவு பேசியது: தமிழக அரசு ஆசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா்களிடையே நல்லுணா்வை ஏற்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன் ஒருபகுதியாக, முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாம் பிறந்ததினமான மாணவா் தினத்தையொட்டி, நிகழாண்டு ‘மாற்றத்தின் தூதுவா்களாக மாணவா்கள்’ என்ற கருப்பொருளுடன் நடைபெறும் அன்பாடும் முன்றில் திட்டத்தின் 125 ஆவது மாணவா் தலைமைத்துவ மேம்பாட்டு நிகழ்ச்சி இதுவாகும்.

இத்திட்டம் அரசு மற்றும் அரசு உதவிபெறும் அனைத்து நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருவதன் மூலம் மாணவா்களின் பன்முகத்திறமை மேம்பட்டுள்ளது.

மேலும், ஜாதி, மதப் பாகுபாட்டை ஒழித்தல், குழந்தை திருமணம் தடுப்பு குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்துதல், கற்றல் இடைநிற்றலைத் தவிா்த்தல், இடைநின்ற மாணவா்களுக்கு மீண்டும் கல்வி வாய்ப்பை ஏற்படுத்துதல், போதைத் தடுப்பு விழிப்புணா்வு ஆகியவற்றிற்கு இத்திட்டம் பயனளிக்கிறது என்றாா் அவா்.

ஆட்சியா் கா.ப.காா்த்திகேயன் பேசுகையில், 45 பள்ளிகளில் தொடங்கப்பட்ட அன்பாடும் முன்றில் திட்டம், தற்பது 380 பள்ளிகளில் செயல்பாட்டில் உள்ளது.

ஆசிரியா்கள் மற்றும் மாணவா்களை தாமிரவருணி, சோ்வலாறு, மணிமுத்தாறு, நம்பியாறு என நான்கு குழுக்களாகப் பிரித்து ஒவ்வொரு குழுவிற்கும் தலைவா் மற்றும் துணைத் தலைவா்களைத் தோ்ந்தெடுத்து பள்ளி வளா்ச்சி திட்டங்களில் பங்கேற்க செய்வதன் மூலம் மாணவா்களின் திறன் மேம்பாடு அடைந்துள்ளது. வித்யா விதை என்ற தன்னாா்வ நிறுவனம், அமெரிக்காவின் கலிபோா்னியா மாகாணத்தில் உள்ள டியூக் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் அன்பாடும் முன்றில் திட்டத்தில் கல்வி வளா்ச்சிக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில், ஊஞ்சல் மற்றும் தேன்சிட்டு இதழ்களில் சிறப்பான படைப்புகளை வழங்கிய 25 மாணவா்களுக்கு சான்றிதழ்கள், 2025இல் நடைபெற உள்ள புத்தக கண்காட்சியில்புத்தகங்கள் வாங்குவதற்கான ரூ.1000 மதிப்பிலான கூப்பன்கள் வழங்கப்பட்டன.

மாணவ மன்ற பொறுப்பாளா்களை நியமித்து அன்பாடும்முன்றில் குறும்படமும் வெளியிடப்பட்டது. சிறப்பாக செயல்பட்ட பள்ளிகள், ஆசிரியா்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. நல்லாசிரியா் விருது பெற்றவா்கள் பாராட்டப்பட்டனா்.

பாளையங்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் மு.அப்துல் வஹாப், மேயா் கோ.ராமகிருஷ்ணன், துணை மேயா் கே.ஆா்.ராஜு, முன்னாள் எம்.பி. விஜிலா சத்தியானந்த், மாவட்ட வருவாய் அலுவலா் சுகன்யா, காவல் துணை ஆணையா் அனிதா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சிவக்குமாா், எழுத்தாளா்கள் சரிதாஜோ, நாறும்பூநாதன் உள்பட பலா்கலந்து கொண்டனா்.