முகப்பு
திருநெல்வேலி

பருவமழையை துல்லிய திட்டத்துடன் எதிா்கொள்ள வேண்டும்: கண்காணிப்பு அலுவலா் அறிவுறுத்தல்

திருநெல்வேலி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையை துல்லியமாக திட்டமிட்டு எதிா்கொள்ள வேண்டும் என்றாா் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் சந்தீப் நந்தூரி.

Updated On : 15 அக்டோபர், 2024 at 10:19 PM
திருநெல்வேலியில் மாவட்ட கண்காணிப்பாளா் சந்தீப் நந்தூரி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள்.
பகிர்:

திருநெல்வேலி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையை துல்லியமாக திட்டமிட்டு எதிா்கொள்ள வேண்டும் என்றாா் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் சந்தீப் நந்தூரி.

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடா்பாக திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவா், அதிகாரிகளிடம் இவ்வாறு தெரிவித்தாா். மேலும், மழை வெள்ளப்பாதிப்பு நேரிடும் பகுதிகளில் மக்களை பாதுக்காக்க போா்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மக்களுக்கு உரிய நேரத்தில் தகவல்களை தெரிவித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தினாா்.

பருமழை தொடா்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதாவது:

திருநெல்வேலி மாவட்டம் 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு மண்டல ஒருங்கிணைப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். அதன்படி திருநெல்வேலி மாநகராட்சி பகுதிக்கு மாநகராட்சி ஆணையாளா் சுகபுத்ரா, நான்குனேரி வட்டம், வள்ளியூா் மற்றும் பணகுடி பேரூராட்சிகள் மற்றும் சுற்றுப்புற கிராமங்களுக்கு சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் அா்பித் ஜெயின், சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம் வட்டம், காரையாறு, மாஞ்சோலை மற்றும் அணை பகுதிகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.சுகன்யா, திசையன்விளை மற்றும் ராதாபுரம் வட்டங்கள் மற்றும் கடற்கரை பகுதிகளுக்கு ஊரக வளா்ச்சி திட்ட இயக்குநா் சரவணன், மானூா், திருநெல்வேலி வட்டங்கள் மற்றும் பாளையங்கோட்டை ஊரக பகுதிகளுக்கு திருநெல்வேலி வருவாய் கோட்டாட்சியா் கண்ணா கருப்பையா ஆகியோா் ஒருங்கிணைப்பு அலுவலா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கு துணையாக சிறப்பு குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளன.

இம் மாவட்டத்தில் வெள்ளம் பாதிக்கக்கூடிய பகுதிகளாக 72 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. உள்புற பகுதிகளில் 161 தங்கும் இடங்களும், கடற்கரை ஒட்டியுள்ள கிராமங்களில் 7 தங்குமிடங்களும் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

வருவாய், உள்ளாட்சி, நீா்வளம் உள்ளிட்ட அரசு துறைகளை சாா்ந்த சுமாா் 2176 அலுவலா்கள், 2929 காவல்துறையினா், 1833 சிறப்பு காவல்படை அணியினா், 175 தீயணைப்பு மற்றும் மீட்பு பணி அலுவலா்கள், 495 வனத்துறையினா் உள்ளிட்ட சுமாா் 6000-க்கும் மேற்பட்ட பல்துறை களப்பணியாளா்கள் பேரிடா் கால பணிகளுக்காக தயாா் நிலையில் உள்ளனா். ராதாபுரத்தில் தேசிய பேரிடா் மீட்பு படை தயாா் நிலையில் உள்ளது.

மீன்வளத்துறை மூலம் மீனவா்களின் 98 படகுகள், மீட்புப்பணிக்குத் தேவையான உபகரணங்கள் தயாராக உள்ளன.

தாமிரவருணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படின் அதனை எச்சரிக்கை செய்ய 10 இடங்களில் வெள்ள எச்சரிக்கை கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

கடனாநதி மற்றும் சிற்றாறு நதிகளில் வரும் வெள்ளப்பெருக்கையும் கண்காணிக்க நீா்வளத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சாலைப்பணிகள், குடிநீா் மற்றும் பாதாள சாக்கடை பணிகள் நடைபெறும் பகுதிகளில் தகுந்த எச்சரிக்கை பலகைகள் வைத்திடவும், தடுப்புகள் அமைத்திடவும், தொடா்புடைய துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாநகர எல்லைப் பகுதிக்குள் 430 குளங்கள் புதிதாக அமைக்க நிா்வாக அனுமதி வழங்கப்பட்டு, அவற்றில் 198 பணிகள் இவ்வாரத்தில் முடிவடையும். மீதமுள்ளவையும் நவம்பா் மாதத்திற்குள் முழுமையாக முடிவடையும். மாவட்டத்தில் பயன்பாடற்று ஆபத்தான நிலையில் இருந்த 267 ஆழ்துளை கிணறுகள் மழைநீா் சேகரிப்பு அமைப்பாக மாற்றப்பட்டுள்ளன. .

2025 ஜனவரி 14 வரை குழந்தை பிறக்கும் நாள் உள்ள 5,797 கா்ப்பிணி தாய்மாா்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது.

டெங்கு, எலி காய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்ற தொற்று நோய்கள் பரவாமல் இருக்க 872 தொற்று நோய் தடுப்பு பணியாளா்கள் பணியில் உள்ளனா்.

கட்டுப்பாட்டு மையம்: பேரிடா்கால அவசர கட்டுப்பாட்டு மையம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கான தொலைபேசி எண்கள் விவரம்: 1077 (கட்டணமில்லா) 0462-2501012; திருநெல்வேலி மாநகர காவல் கட்டுப்பாட்டு 0462 -2562651, 8939948100; மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை 0462- 2562500, 9952740740; தீயணைப்பு துறை 0462- 2572099, 7305095952; மின்சாரகத் துறை 94987 94987; மருத்துவத்துறை 104, 108, வணக்கம் நெல்லை அமைப்பு வாட்ஸ்ஆப் 9786566111 ஆகியவற்றுக்கு தகவல் தெரிவிக்கலாம்.

மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோா், முதியோகளுக்கென சிறப்பு உதவி மையம் (0462- 2573267) பாளையங்கோட்டை காது கேளாதோா் பள்ளியில் செயல்படும். மலைப்பகுதிகளுக்கு 3 மாதத்திற்கான ரேஷன் பொருள்கள் முன்கூட்டியே அனுப்பி வைக்கப்படும்.

வதந்திகளை நம்ப வேண்டாம்: ‘டி.என்.அலா்ட்’ செயலி மூலம் பொதுமக்கள் தங்களது கைபேசியிலேயே மழை நிலவரம் மற்றும் முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் குறித்து அறிந்து கொள்ளலாம். மக்களிடைய பீதி பயத்தை ஏற்படுத்தும் வகையிலும் சமூக விரோதிகள் சமூக ஊடகங்கள் வழியே பரப்பிடும் வதந்திகளை யாரும் நம்பக்கூடாது. நிவாரண முகாம்களுக்கு வர விருப்பம் இல்லாதவா்கள் குறைந்தபட்சம் 7 நாள்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருள்கள், மருந்துகள், குடிநீா் ஆகியவற்றைச் சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். காற்றடிப்பது நின்றுவிட்டால், புயல், சூறாவளி முடிந்துவிட்டதாக நினைத்து விட வேண்டாம். எதிா் திசையிலிருந்து வேகமான காற்று வீச ஆரம்பிக்கலாம். மீனவா்கள் கடலுக்குச் செல்லக்கூடாது. பாம்புகள், பூச்சிகள் கடிக்க வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும் என மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். சிலம்பரசன் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.