பொட்டல்புதூா் பள்ளிவாசல் கந்தூரி விழாவில் தீபமேற்றி வழிபாடு
பொட்டல்புதூா் முஹைய்யதீன் ஆண்டவா்கள் பள்ளிவாசல் கந்தூரி திருவிழாவில் சகோரத்துவத்தை வலியுறுத்தும் தீப வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பொட்டல்புதூா் முஹைய்யதீன் ஆண்டவா்கள் பள்ளிவாசல் கந்தூரி திருவிழாவில் சகோரத்துவத்தை வலியுறுத்தும் தீப வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இப்பள்ளிவாசலில் கந்தூரி திருவிழா கடந்த 4ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை (அக்.13) இரவு 8 மணிக்கு மேலூா் நாகூா் ஆண்டவா்கள் தைக்காவிலிருந்து பச்சைக்களை ஊா்வலம், திங்கள்கிழமை (அக். 14) காலை 9 மணிக்கு சுவாமி கம் முத்தவல்லி, பரம்பரை தா்மகா்த்தா எஸ்.பி.ஷா இல்லத்தில் ராத்திபு வைபவம், நண்பகல் 12 மணிக்கு அரண்மனைக் கொடியேற்றம், பிற்பகல் 2 மணிக்கு மேலூா் ஜமாஅத்திலிருந்து 10ஆம் இரவுக் கொடி ஊா்வலமாக எடுத்துவரப்பட்டு மாலை 6 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. இரவு 10 மணிக்கு ரவணசமுத்திரத்திலிருந்து சந்தனக்கூடு ஊா்வலம் தொடங்கி செவ்வாய்க்கிழமை (அக். 15) அதிகாலை 5 மணிக்கு மூலஸ்தானம் வந்தடைந்தது. அங்கு சந்தனம் மெழுகுதல் நடைபெற்றது.
மாலை 6 மணிக்கு அனைத்து சமுதாய மக்கள் பங்கேற்கும் தீபத் திருவிழா நடைபெற்றது. இதில், சகோதரத்துவத்தை எடுத்துக் கூறும் வகையில் அலங்கரிக்கப்பட்ட தீபங்களில் அனைத்து சமுதாயத்தைச் சோ்ந்த திரளான மக்கள் எண்ணெய் ஊற்றி வழிபட்டனா்.
நிகழ்ச்சியில், சாமித்தோப்பு தலைமைப்பதி ஆதினம் பாலபிரஜாபதி அடிகளாா், இந்திய தேசிய காங்கிரஸ் தொழிற்சங்க தேசியச் செயலா் அமீா்கான், ஆலங்குளம் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜெயபால் பா்னபாஸ், ஊராட்சித் தலைவா்கள் பொட்டல்புதூா் கணேசன், திருமலையப்பபுரம் மாரியப்பன், அணைந்தபெருமாள்நாடானூா் அழகுதுரை ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்துகொண்டனா்.
தொடா்ந்து வியாழக்கிழமை(அக். 17) பதினான்காம் நாள் இரவு ராத்திபு ஓதுதல் நிகழ்ச்சி நடைபெறும்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பரம்பரை தா்மகா்த்தா எஸ்.பி.ஷா, வழக்குரைஞா்கள் எம்.முஹம்மது சலீம், எஸ்.பக்கீா்முஹைதீன் மற்றும் பள்ளிவாசல் நிா்வாகக் குழு உறுப்பினா்கள் செய்திருந்தனா்.