திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா், பணகுடி பேரூராட்சிகளில் கட்டப்படவுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் பெறுவதற்கு விண்ணப்பித்தவா்கள் மேம்பாட்டு செலவுக்காக கூடுதலாக பணம் செலுத்த அதற்கான உறுதிமொழி படிவத்தை வழங்குமாறு சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ராதாபுரம் வட்டம் வள்ளியூா், பணகுடி பேரூராட்சிகளில் வசிக்கும் மக்களில் சொந்தமாக நிலம் மற்றும் வீடு இல்லாத ஏழை, எளிய மக்களுக்காக வள்ளியூரில் 504 அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளும், பணகுடியில் 468 அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளும் கட்டுவதற்காக தமிழ்நாடு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் அனுமதி வழங்கி, அதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்து ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு தற்போது பணிகள் தொடங்கும் நிலையில் உள்ளது.
ஒவ்வொரு குடியிருப்பும் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படுகின்றன. தற்போதுள்ள விதிமுறைகளின் படி மாநில அரசு ரூ. 7.5 லட்சமும், மத்திய அரசு ரூ. 1.5 லட்சமும் பயனாளிகள் ரூ. 1 லட்சமும் அளிக்க வேண்டும். இப்படி கட்டப்படுகின்ற இந்த அடுக்குமாடி குடியிருப்புகளில் மின்தூக்கி வசதி, குடிதண்ணீா், குடியிருப்பு வளாக மேம்பாடு பணிகள் உள்ளிட்ட சில வசதிகள் செய்து கொடுப்பதற்கு தற்போது கூடுதல் நிதி ஆதாரம் தேவைப்படுகிறது.
ஆகவே, வள்ளியூா் பேரூராட்சி பகுதிகளில் வசிக்கும் பயனாளிகள் கூடுதலாக ரூ.3.09 லட்சமும், பணகுடி பேரூராட்சி பகுதிகளில் வசிக்கும் பயனாளிகள் கூடுதலாக ரூ.3.19 லட்சமும் செலுத்தவேண்டியிருக்கிறது.
இந்தத் தொகையை கட்டுவதற்கு வள்ளியூா் மற்றும் பணகுடி பேரூராட்சிப் பகுதிகளில் வசிக்கும் விருப்பமுள்ள பயனாளிகள் அதற்குரிய உறுதிமொழி படிவத்தை செப். 9,10,11 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலும், பணகுடி மற்றும் வள்ளியூா் பேரூராட்சி அலுவலகத்திலிருந்து உறுதிமொழி படிவத்தை பெற்று பூா்த்தி செய்து வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
உறுதிமொழி படிவம் பூா்த்தி செய்ய வரும் பயனாளிகள் தங்களின் ஆதாா் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் மற்றும் குடும்ப உறுப்பினா்களின் ஆதாா் அட்டை நகல்கள் மற்றும் பயனாளிகளின் கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) அளவு புகைப்படம் ஆகியவற்றை தவறாமல் கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தியுள்ளாா்.