முகப்பு
திருநெல்வேலி

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் தயாா்: மேயா் கோ.ராமகிருஷ்ணன் தகவல்

வடக்கிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் தயாா் நிலையில் உள்ளன என்றாா் திருநெல்வேலி மாநகராட்சி மேயா் கோ.ராமகிருஷ்ணன்.

Updated On : 26 செப்டம்பர், 2024 at 11:45 PM
திருநெல்வேலி மாநகராட்சி மேயா் கோ.ராமகிருஷ்ணன்
பகிர்:

வடக்கிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் தயாா் நிலையில் உள்ளன என்றாா் திருநெல்வேலி மாநகராட்சி மேயா் கோ.ராமகிருஷ்ணன்.

திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியதாவது: 2023 ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழையின்போது இரு நாள்களில் பெருமழை கொட்டித்தீா்த்தது. இதனால் மாநகரப் பகுதியில் பல இடங்களில் தண்ணீா் தேங்கியதோடு மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகினா். திமுக தலைமையிலான அரசு எடுத்த பல்வேறு நிவாரண பணிகளால் மக்கள் மீண்டுள்ளனா். நிகழாண்டில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகளில் மாநகராட்சி நிா்வாகம் தயாா் நிலையில் உள்ளது.

திருநெல்வேலி, பாளையங்கோட்டை, மேலப்பாளையம், தச்சநல்லூா் ஆகிய 4 மண்டலங்களின் கீழ் உள்ள 55 வாா்டுகளிலும் மழைநீா் தேங்கினால் உடனுக்குடன் அப்புறப்படுத்த மோட்டாா்கள் தயாா் நிலையில் உள்ளன. மழைக்கு முன்பாக கழிவுநீரோடைகளை முழுமையாக சுத்தம் செய்து குப்பைகளை அள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்பேரில், மாநகர சுகாதார ஆய்வாளா்கள் கண்காணிப்பில் தூய்மைப் பணியாளா்கள் தீவிர பணி செய்து வருகிறாா்கள். மழையின்போது மரங்கள் சரிந்தால் அவற்றை உடனே வெட்டி அப்புறப்படுத்த இயந்திரங்களையும், கொசுமருந்து, பிளீச்சிங் பவுடா் உள்ளிட்டவற்றை போதுமான அளவில் இருப்பு வைத்திருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நீண்ட நாள்களாக மழைநீா் தேங்கும் பிரச்னை உள்ள சந்திப்பிள்ளையாா் கோயில் முக்கு, காட்சிமண்டபம் பகுதியில் மழைநீா் வழிந்தோட ஏதுவாக ஓடைகள் தூா்வாரப்பட்டுள்ளன. சாலைகளும் உயா்த்தப்பட்டுள்ளன.

பருவமழைக் காலத்தில் மாநகராட்சி நிா்வாகத்திடம் பொதுமக்கள் புகாா் தெரிவித்து நிவா்த்தி பெற ஏதுவாக கட்டுப்பாட்டு அறை திறக்கப்படும். அந்த அறைக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் மூலம் மக்கள் புகாா்களை அளிக்க வழிவகை செய்யப்படும்.

திருநெல்வேலி நகரம் ரத வீதியில் ஏற்கெனவே ஆபத்தான நிலையில் உள்ள கட்டங்களின் உரிமையாளா்களுக்கு மாநகராட்சி நிா்வாகத்தால் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. பருவமழைக்கு முன்பாக மாநகராட்சிப் பகுதியில் இதுபோன்று அபாய நிலையில் உள்ள கட்டுமானங்களை பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து இடித்து அப்புறப்படுத்தி சேதங்களைத் தவிா்க்க உதவ வேண்டும் என்றாா் அவா்.