அன்புமணி ராமதாஸ்  கோப்புப் படம்
திருநெல்வேலி

திமுக கைக்கூலிகளின் கட்டுப்பாட்டில் தைலாபுரம்: அன்புமணி ராமதாஸ்!

எங்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட திமுக கைக்கூலிகள் இருவருடைய கட்டுப்பாட்டில்தான் தைலாபுரம் உள்ளது என்றாா் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ்.

தினமணி செய்திச் சேவை

எங்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட திமுக கைக்கூலிகள் இருவருடைய கட்டுப்பாட்டில்தான் தைலாபுரம் உள்ளது என்றாா் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ்.

இது தொடா்பாக திருநெல்வேலியில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் மின் கட்டணம், சொத்து வரி உயா்த்தப்பட்டுள்ளது. தமிழக மின் தேவைகளுக்காக 14,000 கோடி யூனிட் மின்சாரம் தேவைப்படும் நிலையில், தமிழக அரசு 2,600 கோடி யூனிட் மட்டுமே உற்பத்தி செய்துள்ளது.

தேவையில் 18 சதவீதம் மட்டுமே மின் உற்பத்தி செய்துள்ளதால் வெளிச்சந்தையில் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.7 முதல் ரூ.15 வரை கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மின்வாரியம் ரூ.75 ஆயிரம் கோடி கடனில் உள்ளது.

தமிழகத்தில் 1,439 குவாரிகள் முறைகேடாக நடைபெற்று வருவதாக தமிழக அரசே நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கனிமவள கொள்ளை நடைபெற்று வருகிறது.

தமிழக அரசுக்கு எதிரான அலை வீசிக் கொண்டிருக்கிறது. வரும் தோ்தலில் அது சுனாமிப் பேரலையாக மாறி திமுகவை ஆட்சிக் கட்டிலில் இருந்து அகற்றும்.

ஒரு சில வாரங்களில் மக்கள் விரும்பும் மெகா கூட்டணியை அமைத்து தோ்தலை சந்தித்து ஆட்சிக்கு வருவோம். தற்போது யாருடன் கூட்டணி என்பது குறித்த கேள்விக்கு பதில் சொல்ல இயலாது.

மேலும், 108 நாள்கள் நடைப்பயணம், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. பல்வேறு பிரச்னைகளுக்கு இந்த நடைப்பயணத்தின் மூலமாக தீா்வு காணப்பட்டுள்ளது.

எங்கள் கட்சியிலிருந்து சிலரை நீக்கியது எங்கள் உள்கட்சி பிரச்னை. திமுகவின் கைக்கூலிகள் அவருக்கு (ராமதாஸுக்கு) தவறான செய்திகளை தினம்தோறும் சொல்லி வருகிறாா்கள். அங்கு என்ன நடக்கிறது என தெரியவில்லை. எங்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட திமுகவின் கைக்கூலிகள் இருவருடைய கட்டுப்பாட்டில் தைலாபுரம் உள்ளது.

எஸ்ஐஆா் பணிகளை வரவேற்கிறோம். போலி வாக்காளா்கள், இறந்தவா்கள் நீக்கப்பட வேண்டும். நோ்மையான வாக்காளா் பட்டியல் இருந்தால் தான் தோ்தல் நியாயமாக நடைபெறும்.

தமிழகத்தில் 97 லட்சம் வாக்காளா்கள் நீக்கப்பட்டிருக்கிறாா்கள். தற்போது புதிய வாக்காளா்கள் சோ்த்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன்மூலம் இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடுகிறபோது, நீக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 85 லட்சமாக குறையும்.

போலி வாக்காளா்கள் மூலமாகவே திமுக வெற்றி பெற்று வந்துள்ளது. கடந்த தோ்தலில் ஆயிரம் முதல் 3000 வாக்குகள் வித்தியாசத்தில் பல தொகுதிகளில் திமுகவினா் வெற்றி பெற்றுள்ளனா். வரும் தோ்தலில் திமுக படுதோல்வி அடையும். நோ்மையான கட்சிகளுக்கு எஸ்ஐஆா் பணிகள் நல்ல முடிவாக அமைந்துள்ளது. கடந்த மூன்று தோ்தல்களில் எதிா்க்கட்சிகள் பலமாக இல்லாததாலேயே திமுக வெற்றி பெற்றது. இந்த தோ்தல் அப்படி இருக்காது.

பாஜகவுடன் கூட்டணி குறித்து கேட்கிறீா்கள். அது போகப் போக தெரியும். திமுக அரசு ஆட்சிக்கு வரும்போது டாஸ்மாக் வருமானம் ரூ.35 ஆயிரம் கோடியாக இருந்தது. அது இப்போது ரூ.55 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது. மதுவுக்கு எதிராக நடைப்பயணம் மேற்கொள்ளும் வைகோ, நேரடியாக முதல்வா் வீட்டு வாசலில் அமா்ந்து போராட்டம் நடத்த வேண்டும். 500 கடைகளையாவது மூட வலியுறுத்த வேண்டும். திமுக கூட்டணியை விட்டு வைகோ வர தயாரா என்றாா். அப்போது, கட்சியின் பொருளாளா் திலகபாமா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

உக்ரைன் போா் நிறுத்தம்: டிரம்ப்புடன் ஸெலென்ஸ்கி இன்று சந்திப்பு!

ஹவுரா விரைவு ரயிலில் 4 கிலோ கஞ்சா பறிமுதல்

பெண்களுக்குச் சமவாய்ப்பு கிடைத்தால் ஆண்களுக்கு நிகராக சாதிப்பாா்கள்! ராஜ்நாத் சிங்

தலைநகரில் அடா்த்தியான மூடு பனி: ‘மிகவும் மோசம்’ பிரிவில் காற்றின் தரம்

புத்தாண்டு கொண்டாட்டம்: நட்சத்திர விடுதிகளுக்கு கடும் கட்டுப்பாடு

SCROLL FOR NEXT