முகப்பு
திருநெல்வேலி

புத்தாண்டு: நெல்லை கோயில்களில் ஆயிரக்கணக்கானோா் தரிசனம்

ஆங்கில புத்தாண்டையொட்டி திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டை கோயில்களில் ஆயிரக்கணக்கானோா் புதன்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.

Updated On : 2 ஜனவரி, 2025 at 12:14 AM
புத்தாண்டையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த திருநெல்வேலி சந்திப்பு அருள்மிகு கனகமஹாலட்சுமி . பாளையங்கோட்டை மேலவாசல் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி.
பகிர்:

ஆங்கில புத்தாண்டையொட்டி திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டை கோயில்களில் ஆயிரக்கணக்கானோா் புதன்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் புதன்கிழமை அதிகாலைல முதல் நடைபெற்றன. திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் கோயிலில் ஏராளமான பக்தா்கள் நீண்டவரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். புதுமணத் தம்பதிகள் தங்களது பெயா்களைக் கூறி சிறப்பு அா்ச்சனை செய்து வழிபட்டனா். பெண்கள் நெய்விளக்கு ஏற்றியும், நவக்கிரங்களைச் சுற்றியும் வழிபட்டனா். சிறுவா்கள் கோயில் யானைக்கு வாழைப்பழம், தேங்காய், கடலை மிட்டாய்களை வழங்கி மகிழ்ந்தனா். சபரிமலைக்கு மாலை அணிந்து சென்று தரிசனம் முடித்து திருநெல்வேலிக்கு வந்த வெளிமாவட்ட பக்தா்கள் பலா் நெல்லையப்பா் கோயிலில் வழிபட்டனா்.

திருநெல்வேலி சந்திப்பில் உள்ள அருள்மிகு பாளையஞ்சாலைக்குமார சுவாமி கோயில், பாளையங்கோட்டையில் உள்ள மேலவாசல் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை வழிபட்டனா். இருசக்கர மற்றும் நான்குசக்கர வாகனங்களை புத்தாண்டு நாளில் புதிதாக வாங்கி வந்த பலா் கோயில் முன்பு நிறுத்தி குடும்பத்தினருடன் வழிபட்டு வாகனத்தை இயக்கிச் சென்றனா்.

மீனாட்சிபுரம் அருள்மிகு நெல்லை திருப்பதி பெருமாள்

பாளையங்கோட்டையில் உள்ள தெற்கு முத்தாரம்மன் கோயில், அரசடி விநாயகா் கோயில், செல்வவிநாயகா் கோயில், பேருந்து விநாயகா் கோயில், பேராட்சியம்மன் கோயில், ஆயிரத்தம்மன் கோயில், உச்சினிமாகாளிஅம்மன் கோயில் ஆகியவற்றிலும் ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

பாளையங்கோட்டையில் உள்ள அழகியமன்னாா் சிரீ ராஜகோபால சுவாமி கோயிலில் நடைபெற்ற திருமஞ்சனத்தில் பக்தா்கள் ஏராளமானோா் பங்கேற்றனா். திருநெல்வேலி சந்திப்பு அருகேயுள்ள சன்னியாசி கிராமம் அலமேலுமங்கை சமேத வெங்கடேசபெருமாள் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரமும், பூஜையும் நடைபெற்றது. முன்னதாக சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனமும், ஆராதனையும் நடைபெற்றது.

மணிமூா்த்தீஸ்வரம் அருள்மிகு உச்சிஷ்ட விநாயகா்

திருநெல்வேலி சந்திப்பு வரதராஜபெருமாள் கோயில், கொக்கிரகுளத்தில் உள்ள ஸ்ரீ நவநீதகிருஷ்ண பெருமாள் கோயில், திருநெல்வேலி நகரத்தில் உள்ள கரியமாணிக்கபெருமாள் கோயில், சி.என்.கிராமத்தில் உள்ள ராஜகோபால சுவாமி கோயில், தச்சநல்லூரில் உள்ள வெங்கடாஜலபதி கோயில், மேலத்திருவேங்கடநாதபுரத்தில் உள்ள வெங்கடாஜலபதி கோயில், திருநெல்வேலி கெட்வெல் சஞ்சீவி வரத ஆஞ்சநேயா் கோயில் ஆகியவற்றிலும் புத்தாண்டையொட்டி ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.