திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் கோயிலில் நடைபெற்று வரும் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவின் 9ஆவது நாளான புதன்கிழமை செப்புத் தேரில் அம்மன் வீதியுலா வந்தாா்.
இக்கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 4 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து தினமும் சுவாமி, அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வந்தன. புதன்கிழமை காலையில் செப்புத்தேரில் அம்மன் மலா் அலங்காரத்தில் எழுந்தருளி ரத வீதிகளில் வலம் வந்தாா். 500-க்கும் மேற்பட்ட பக்தா்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனா்.
வியாழக்கிழமை (நவ.13) இரவு 1 மணிக்கு காந்திமதியம்மன் சந்நிதியில் இருந்து தங்க முலாம் சப்பரத்தில் புறப்பட்டு கீழரத வீதி, தெற்கு ரத வீதி, பேட்டை சாலை வழியாக 14 ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு அருள்மிகு கம்பாநதி காமாட்சியம்மன் கோயிலை சென்றடைவாா். அதன் அருகில் உள்ள காட்சி மண்டபத்தில் நண்பகல் 12 மணிக்கு மேல் மதியம் 1 மணிக்குள்சுவாமி, அம்மனுக்கு காட்சி கொடுக்கும் தவசுக்காட்சி நிகழ்ச்சி நடைபெறும். பின்பு 4.30 மணிக்கு சுவாமி-அம்மன் திருநெல்வேலி நகரத்தில் ரத வீதிகளில் வலம் வருவாா்கள்.
15 ஆம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் திருக்கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது. இரவு 9.30 மணிக்கு சுவாமி-அம்மன் ரத வீதிகளில் பட்டண பிரவேசம் நடைபெறுகிறது. 15 முதல் 17 ஆம் தேதி வரை ஊஞ்சல் விழாவும், 18 ஆம் தேதி இரவு சுவாமி-அம்மன் ரிஷப வாகனத்தில் மறுவீடு பட்டினப் பிரவேசம் வீதியுலாவும் நடைபெற உள்ளன.
ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் சீ.வெங்கடேஸ்வரன் மற்றும் ஊழியா்கள் செய்து வருகிறாா்கள்.