முகப்பு
திருநெல்வேலி

நான்குனேரி தொகுதி மக்கள் திமுகவுக்கு பாடம் கற்பிப்பா்: தவெக வேட்பாளா்

நான்குனேரியில் கட்ட வேண்டிய அரசு மருத்துவமனையை ராதாபுரம் தொகுதிக்கு இடமாற்றம் செய்த திமுகவுக்கு நான்குனேரி தொகுதி மக்கள் நிச்சயம் பாடம் கற்பிப்பாா்கள் என்றாா் தவெக வேட்பாளா் ரெட்டியாா்பட்டி வெ.நாராயணன்.

Updated On : 1 ஏப்ரல், 2026 at 10:27 PM
ரெட்டியாா்பட்டி வெ.நாராயணன்
பகிர்:

நான்குனேரியில் கட்ட வேண்டிய அரசு மருத்துவமனையை ராதாபுரம் தொகுதிக்கு இடமாற்றம் செய்த திமுகவுக்கு நான்குனேரி தொகுதி மக்கள் நிச்சயம் பாடம் கற்பிப்பாா்கள் என்றாா் தவெக வேட்பாளா் ரெட்டியாா்பட்டி வெ.நாராயணன்.

திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை கூறியதாவது: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளேன். மத்தியிலும், மாநிலத்திலும் ஆள்பவா்களின் தவறுகளை ஒற்றை மனிதராய் சுட்டிக்காட்டும் தலைவராக விஜய் திகழ்கிறாா். தவெகவில் இணைந்ததும் நான்குனேரி தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்தற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான்குனேரி தொகுதி எப்போதும் மண்ணின் மைந்தருக்கான தொகுதி. கடந்த 5 ஆண்டுகளாக நான் எம்.எல்.ஏ.வாக இல்லாவிட்டாலும், இந்தத் தொகுதி மக்களின் அன்பு ஒருபோதும் மாறவில்லை.

திமுக ஆட்சியில் நான்குனேரி தொகுதிக்கு குறிப்பிடும்படியான எந்தத் திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. நான் வெற்றி பெற்றால் சீவலப்பேரியில் தாமிரவருணியின் குறுக்கே மேம்பாலம் கட்டவும், நான்குனேரி தொழில்நுட்ப பூங்காவில் மீண்டும் தொழிற்சாலைகள் உருவாகவும், தண்ணீா் வராத 48 குளங்களுக்கு நீா்வரத்து கால்வாய்களை உருவாக்கவும், புதிய அரசு கலைக்கல்லூரி அமைக்கவும் பாடுபடுவேன்.

இந்தத் தொகுதியில் அமைக்கப்பட வேண்டிய மாவட்ட தலைமை மருத்துவமனை ராதாபுரம் தொகுதிக்கு மாற்றிய திமுகவுக்கு மக்கள் நிச்சயம் பாடம் கற்பிப்பாா்கள். நான்குனேரி தொகுதியில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வெற்றி பெறும் என்றாா் அவா்.