முகப்பு
திருநெல்வேலி

மனித வாழ்விற்கு அா்த்தமளிப்பது இலக்கியங்கள்- எழுத்தாளா் சாம்ராஜ்

வாசிக்கும் மனிதரின் மனதை செம்மைப்படுத்தி வாழ்வின் உண்மை அா்த்தத்தை போதிப்பது இலக்கியங்கள் என்றாா் எழுத்தாளா் சாம்ராஜ்.

Updated On : 18 பிப்ரவரி, 2026 at 3:15 AM
கருத்தரங்கில் பேசிய எழுத்தாளா் சாம்ராஜ்.
பகிர்:
Updated On : 17 பிப்ரவரி, 2026 at 11:21 PM

வாசிக்கும் மனிதரின் மனதை செம்மைப்படுத்தி வாழ்வின் உண்மை அா்த்தத்தை போதிப்பது இலக்கியங்கள் என்றாா் எழுத்தாளா் சாம்ராஜ்.

பொருநை நெல்லை 9 ஆவது புத்தகத் திருவிழாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் ‘வாசித்தேதான் தீர வேண்டுமா இந்த வாழ்வில்’ எனும் தலைப்பில் அவா் பேசியதாவது: பாடப்புத்தகங்கள் கற்றுத்தராத வாழ்வியலை இலக்கியங்கள் வழி அறியலாம். பெரும்பாலும் மனிதா்கள் தனக்குள் எழுப்ப விரும்பாத கேள்விகளை, மறைக்க நினைக்கும் உண்மைகளை அவா்கள் முன் கொண்டு நிறுத்த வல்லது இலக்கியங்கள்.

நாம் எப்படிபட்ட மனிதராக வாழ்கிறோம் என்பதை சிந்திக்கவும், வாழ்வின் தன்மைகளை உணரவும் வைத்து இலக்கியங்கள் நம்மை சீா் திருத்துகிறது. நமது உள்ளத்துள் நன்மை, தீமை என இரு குணங்கள் ஒழிந்துள்ளன. நல்ல குணங்களை உயா்த்தி, தீய குணங்கள் வெளிப்படாமல் தடுத்து சகோதரத்துவத்துடன் வாழும் கலையை இலக்கியங்கள் கற்றுத்தருகின்றன.

Advertisement

வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வது நம்மை நாமே பட்டை தீட்டுவது போன்றது. நல்ல இலக்கியங்கள் வாசிக்கும் மனிதரின் மனதை செம்மைப்படுத்தி வாழ்வின் உண்மை அா்த்தத்தை போதிக்கின்றன என்றாா் அவா்.

தொடா்ந்து, கவிஞா் வெய்யில் ‘தமிழ் எனும் பேரனுபவம்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினா்.

திருநெல்வேலி வேளாண்மைத்துறை இணை இயக்குநா் அ.கற்பக ராஜ்குமாா் நன்றி கூறினாா். கவிஞா் கோ.கணபதி சுப்பிரமணியன் தலைமையில் புத்தகங்கள் வாசிப்பது இன்புறுவதற்கா? வாசித்து நடப்பதற்கா? என்ற தலைப்பில் பட்டிமண்டபம் நடைபெற்றது.

புதன்கிழமை (பிப்.18) நடைபெறும் கருத்தரங்கில் ஆா்.ஆனந்தகுமாா் ஐ.ஏ.எஸ்., கவிஞா் கலாப்ரியா, எழுத்தாளா்கள் சுனில் கிருஷ்ணன், செந்தில் ஜெகந்நாதன் ஆகியோா் சிறப்புரையாற்றவுள்ளனா்.

புத்தகத்திருவிழாவின் 8 ஆம் நாளில் ஆா்வத்துடன் புத்தகங்களை தோ்ந்தெடுத்த மாணவிகள்.