தூத்துக்குடி

இலங்கை கடற்படையால் பறிமுதல்: நாட்டுப்படகுகளுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு தேவை: குறைதீர் கூட்டத்தில் மீனவர்கள் வலியுறுத்தல்

DIN

இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நாட்டுப்படகுகளுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடாக அவற்றின் உரிமையாளர்களுக்கு அரசு வழங்க வேண்டும் என மீனவர் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
 தூத்துக்குடி மாவட்ட மீனவர்களுக்கான குறைதீர் கூட்டம் ஆட்சியர் ம. ரவிகுமார் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மீன்துறை இணை இயக்குநர் ரீனா செல்வி, உதவி இயக்குநர் பாலசரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், மீனவர் சந்தியாகு பிச்சை பேசியது: இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட நாட்டுப்படகுகள் இதுவரை மீட்கப்படவில்லை. பிடிபட்ட படகுகளின் உரிமையாளர்களுக்கு வேறு வாழ்வாதாரம் இல்லாத நிலையில் அவர்களுக்கு அரசு ரூ. 5 லட்சம் நிவாரணத்தொகை வழங்க வேண்டும்.
மேலும், திரேஸ்புரத்தில் வலைபின்னல் கூடம் கட்டித்தர வேண்டும். தூண்டில் வளைவு பணி முழுமையாக முடிக்கப்படாததால் இதுவரை 28 படகுகள் சேதமடைந்துள்ளன. மீனவர்களுக்கு 58 வயது நிறைவடைந்ததும், கூட்டுறவு சங்கத்தில் இருந்து நீக்கி விடுகின்றனர். அவர்கள் மூலமாகவே முதியோர் ஓய்வூதியம் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்களின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார்.
நாட்டுப்படகு மீனவர்கள் சங்க தலைவர் கயஸ்: மணப்பாடு பகுதியில் விசைப்படகுகள் அத்துமீறி மீன்பிடிப்பதால், நாட்டுப்படகு மீனவர்களின் வலைகள் சேதமடைகின்றன.  மீனவர்கள் விபத்தில் சிக்கும்போது கடலோர காவல் படை, கடலோர பாதுகாப்பு குழும போலீஸார் மீட்பு பணியில் ஈடுபடுவதில்லை என குற்றம்சாட்டினார்.
ஆட்சியர் ம. ரவிகுமார் பதிலளித்து பேசியது: மணப்பாடு பகுதியில் கடற்கரையோரமாக மீன்பிடித்த 4 விசைப்படகுகள் அடையாளம் காணப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வலைகள் சேதத்துக்கு இழப்பீடு வழங்குவதில் உள்ள பிரச்னையை தீர்க்க குழு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நாட்டுப்படகு மீனவர்கள், விசைப்படகு மீனவர்கள் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் அடங்கிய குழு அமைத்து, வலை தொடர்பான பிரச்னைகளை பேசி தீர்வு காணலாம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT