தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை முன் முற்றுகை: மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் உள்பட 400 பேர் கைது
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முற்றுகைப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முற்றுகைப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலர் கே. பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 400 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி சிப்காட் பகுதியில் இயங்கிவரும் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் கட்சியின் தூத்துக்குடி மாவட்டக்குழு சார்பில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.
மாநிலச் செயலர் கே. பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். மத்தியக்குழு உறுப்பினர் உ. வாசுகி, மாநிலக் குழு உறுப்பினர் மல்லிகா, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொருளாளர் கே.பி. பெருமாள், மாவட்டச் செயலர் கே.எஸ். அர்ஜுனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கே. பாலகிருஷ்ணன் பேசுகையில், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். ஆலையை மூட அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் அனைத்துப் பகுதி மக்களையும் திரட்டி நாங்களே மூடுவோம். ஆலையின் காப்பர் தயாரிப்புக்காக வெளிநாடுகளிலிருந்து வரும் கச்சா மூலப் பொருள்களை ஆலைக்குள் செல்ல அனுமதிக்காமல் மறியல் நடத்துவோம். அதேபோல, உற்பத்தியாகும் காப்பரை வெளியே எடுத்துச் செல்லவும் அனுமதிக்க மாட்டோம் என்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர். ரசல், ஆறுமுகம், பேச்சிமுத்து, மாநகரச் செயலர் ராஜா, மாதர் சங்க மாவட்டச் செயலர் பூமயில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலர் முத்து உள்ளிட்டோர் கலந்துகொண்டு முழக்கமிட்டனர்.
இந்தப் போராட்டத்தையொட்டி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பெ. மகேந்திரன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, போலீஸார் அமைத்திருந்த தடுப்பு வேலியைத் தாண்டி ஆலையை நோக்கி முற்றுகையிடச் சென்றதாக மார்க்சிஸ்ட் மாநிலச் செயலர் கே. பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 400 பேரை போலீஸார் கைது செய்தனர். இப்போராட்டத்தால் தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போராட்டத்தில் சீமான் பங்கேற்பு
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் புதன்கிழமை பங்கேற்றார்.
இந்த ஆலையின் விரிவாக்கத்தை தடுத்து நிறுத்த வேண்டும், ஆலையை மூட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆலை அருகேயுள்ள அ.குமரெட்டியாபுரம் கிராம மக்கள் 52 நாள்களாகப் போராடி வருகின்றனர்.
இப்போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் புதன்கிழமை பங்கேற்று, மக்களைச் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்; மக்களோடு தரையில் அமர்ந்து முழக்கங்களை எழுப்பினார்.
அப்போது அவர் பேசுகையில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடும்போது, ஆலை அமைய துணையாக இருந்தோரும் சேர்ந்து போராடுவது மிகப்பெரிய கொடுமை. ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள நிலத்தில் கிடைக்கும் நீரை அரசு சோதித்து பார்க்க வேண்டும். இதில் அரசு கவனம் செலுத்தாதது சரியானதல்ல. மக்கள் கோரிக்கையை ஏற்று ஆலையை அரசு மூட வேண்டும் என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.