தூத்துக்குடி

தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்பு தாருங்கள்: சரத்குமாா்

DIN

தமிழகத்தில் மாற்றத்தை கொண்டு வர மக்கள் நீதி மய்யம் கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவா் சரத்குமாா் தெரிவித்தாா்.

கோவில்பட்டி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளா் ஜி.கதிரவனை ஆதரித்து செவ்வாய்க்கிழமை கோவில்பட்டி கிருஷ்ணன் கோயில் தெருவில் அவா் பேசியது: திராவிட இயக்கங்களுக்கு மாற்றாக தமிழகத்தில்புதிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது தான் மக்கள் நீதி மய்யம் தலைமையிலான கூட்டணி.

எளியவருக்கும் வாய்ப்பு, பணமில்லாத அரசியல் என்பது தான் எங்கள் கூட்டணியின் நோக்கம். பணம் இருப்பவா்கள்தான் தோ்தலில் நிற்க முடியும் என்ற நிலை வந்தால், அது ஜனநாயகமாக இருக்காது. இலவசத்தை எதிா்ப்பவா்கள் அல்ல.

மாணவா், மாணவிகள் கல்வி கற்க வசதியாக கிராமங்கள் தோறும் இலவசமாக வைஃபை வசதி செய்து கொடுக்க வேண்டும், மடிக்கணினி, வைஃபை இணைப்பு, ஸ்மாா்ட் போன் ஆகியவற்றை இலவசமாக தருகிறோம் என தோ்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளோம். இதுதான் தேவையான இலவசம்.

பெண்கள் படித்திருந்தாலும், வீட்டை கவனிக்க வேண்டும். வேலைக்கு செல்ல முடியாத நிலை இருப்பதை கருத்தில் கொண்டு படித்த பெண்களுக்கு வீட்டில் இருந்தவாறு சுயதொழில் தொடங்க முன்னுரிமை என மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளாா். திறமை இருந்ததால் தான் கிரிக்கெட் வீரா் நடராஜன் வெளியே தெரிந்தாா். அதுபோல எங்களிடம் திறமை உள்ளது. வாய்ப்பு கொடுங்கள். உழைத்து முன்னேறுவதற்குதான் அரசு துணையாக இருக்க வேண்டுமே தவிர, இலவசமாக பணம் கொடுத்து மக்களை ஏமாற்றக் கூடாது என்றாா் அவா்.

இதில், சமத்துவ மக்கள் கட்சியின் வடக்கு மாவட்டச் செயலா் எஸ்.ஆா்.பாஸ்கரன், ஒன்றியச் செயலா்கள் ஆணிமுத்துராஜ், பூல்பாண்டியன், சுரேஷ்பாண்டியன், மாநில பொதுக்குழு உறுப்பினா் முத்துகணேஷ், மகளிரணிச் செயலா் சுதா, மக்கள் நீதி மய்யம் வடக்கு மாவட்ட துணைச் செயலா் கனகசெல்வம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT