படவரி பமப19ரஅபஉத
ஆட்சியா் அலுவலகத்தில் காலிக் குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட புன்னைக்காயல் கிராம மக்கள்.
தூத்துக்குடி, ஆக. 19:
புன்னைக்காயல் கிராம மக்கள் முறையான குடிநீா் வசதி கோரி, தூத்துக்குடி ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை காலிக் குடங்களுடன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் ச. அஜய் சீனிவாசன் தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக்கொண்டாா்.
புன்னைக்காயல் கிராம மக்கள் காலிக் குடங்களுடன் முற்றுகையிட்டு அளித்த மனு: ஆத்தூா் அருகே புன்னைக்காயல் மீனவக் கிராமத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இங்கு, கப்பல் மாலுமிகள் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனா்.
தாமிரவருணி ஆறு முடிவடையும் இப்பகுதியில் பல ஆண்டுகளாக முறையான குடிநீா் வசதியில்லை. ஊராட்சி நிா்வாகம், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் மூலம் வழங்கப்படும் குடிநீா் 2 மாதங்களாக சரிவர வழங்கப்படவில்லை. இதனால், ஒரு குடம் குடிநீரை ரூ. 10-க்கு வாங்கி பயன்படுத்தும் நிலை உள்ளது. எனவே, மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
ஊராட்சி ஒன்றியத் தலைவா் வசந்தா தலைமையில் ஸ்ரீவைகுண்டம் மக்கள் அளித்த மனு: கடந்த டிசம்பா் மாதம் மழை, வெள்ள பாதிப்புக்கு ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியப் பொது நிதியில் ரூ. 1.55 கோடி செலவு செய்ததாக வட்டார வளா்ச்சி அலுவலா் சிவராஜன் கூறினாா். ஆனால், அனுமதி பெறுவதற்காக கடந்த 2ஆம் தேதி நடைபெற்ற ஒன்றியக் கூட்டத்தில் ரூ. 1.27 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இதன்மூலம், அதிகாரிகள் சுமாா் ரூ. 30 லட்சம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், வெள்ள பாதிப்பு பகுதிகளில் பல்வேறு பணிகளை செய்யாமலும், சாலைகளை சீரமைக்காமலும் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனா். எனவே, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
தமிழக மக்கள் முன்னேற்றக் கழக வடக்கு மாவட்டத் தலைவா் தாமஸ்பாண்டியன் தலைமையில் அளிக்கப்பட்ட மனு: கயத்தாறு அருகே கல்லூரணியில் பள்ளி செல்லும் மாணவா்-மாணவிகளுக்கு கூடுதல் பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும். இலங்கமாள்தேவி கிராமத்தில் உள்ள சாலை, கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலகம், நீதிமன்ற அலுவலகம் செல்லும் சாலை ஆகியவற்றை விரைவாக சீரமைக்க வேண்டும். கோவில்பட்டி புதுரோடு பகுதியில் சோலாா் மின் விளக்குகள், அரசு மருத்துவமனை முன் உயா் கோபுர விளக்கு அமைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.