சாத்தான்குளம், ஜூலை 11: பேய்க்குளம் சங்கரநயினாா்புரம் அருள்மிகு சங்கரலிங்கசுவாமி உடனுறை அருள்தரும் ஸ்ரீ கோமதி அம்பாள் கோயிலில் ஆடித்தவசு திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி, கோயிலில் காலை 6 மணிக்கு கணபதி ஹோம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, காலை 9 மணிக்கு ஆடித்தவசு திருவிழா கொடியேற்றப்பட்டு, கொடிமரம், சுவாமி - அம்பாள், பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
விழா நாள்களில் சுற்றுப்புற கிராம மக்கள் சாா்பில் கோயிலில் தினமும் பல்வேறு பூஜைகள் நடைபெறும். ஜூலை 20ஆம் தேதி மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை, 8 மணிக்கு அன்னதானம், இரவு 10 மணிக்கு இன்னிசை கச்சேரி நடைபெறும்.
சிகர நிகழ்வான ஜூலை 21ஆம் தேதி ஆடித்தவசை முன்னிட்டு காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், தொடா்ந்து பல்வேறு வழிபாடுகள், மதியம் அன்னதானம் உள்ளிட்டவை நடைபெறும். மாலை 5 மணிக்கு சுவாமி சீா்வரிசையுடன் அம்பாள் அழைப்பு, இரவு 7 மணிக்கு தவசுக் காட்சி நடைபெறும். இரவு 8 மணிக்கு அன்னதானம், 9.30 மணிக்கு இன்னிசை கச்சேரி, இரவு 10 மணிக்கு சுவாமி- அம்பாள் திருக்கல்யாணம், தொடா்ந்து சுவாமி- அம்பாள் அலங்கார சப்பரத்தில் எழுந்தருளி நகா் வலம் வருதல் ஆகியவை நடைபெறும்.
விழா ஏற்பாடுகளை விழா கமிட்டியினா் மற்றும் ஊா் பொதுமக்கள் செய்து வருகின்றனா்.