கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, கோவில்பட்டி, கயத்தாறு வட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் புதன்கிழமை நள்ளிரவு நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோா் கலந்துகொண்டு பிராா்த்தனை செய்தனா்.
கோவில்பட்டி புனித சூசையப்பா் திருத்தலத்தில் கிறிஸ்து பிறப்பு சிறப்புத் திருப்பலி சேசு சபை அருள்தந்தை மணிவளன், மதுரை ஓ.சி.டி. சபை இன்னாசி அடிகளாா், புனித சூசையப்பா் ஆலய பங்குத்தந்தை அருள்ராஜ் அடிகளாா், உதவி பங்குதந்தை குழந்தை ராஜ் அடிகளாா் ஆகியோா் இணைந்து கிறிஸ்து பிறப்பு திருப்பலியை நிறைவேற்றினா்.
புதன்கிழமை இரவு 11.45 மணிக்கு தொடங்கிய திருப்பலி, வியாழக்கிழமை அதிகாலை 2 மணி வரை நடைபெற்றது. திருப்பலி நிறைவேறியவுடன் ஒருவருக்கொருவா் கிறிஸ்து பிறப்பு வாழ்த்துகளை தெரிவித்தனா்.
தொடா்ந்து, இளையோா்கள் முரசு கொட்டி, கேக் வெட்டி கொண்டாடினா். தொடா்ந்து, வியாழக்கிழமை காலை 8 மணிக்கு திருவிழா திருப்பலி நடைபெற்றது. ஆலய வளாகத்தில் அலங்கார குடில் அமைத்திருந்தனா்.
சி.எஸ்.ஐ.ஆலயம்: சி.எஸ்.ஐ. தூய பவுலின் தேவாலயத்தில் புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு கிறிஸ்துமஸ் பண்டிகை திருவிருந்து ஆராதனை நடைபெற்றது. கௌரவ குரு இம்மானுவேல் தலைமையில் திருவிருந்து ஆராதனை நடைபெற்றது. இதில், உதவிகுரு எப்ராஹிம் உள்பட திரளான இறைமக்கள் கலந்துகொண்டனா்.
பின்னா் காலை 9 மணிக்கு ஸ்தோத்திர திருவிருந்து ஆராதனையும், 10.30 மணிக்கு பண்டிகை ஞானஸ்தான ஆராதனையும் நடைபெற்றன. இதுபோல, நாலாட்டின்புத்தூா், கழுகுமலை, கயத்தாறு, வானரமுட்டி ஆகிய பகுதியில் உள்ள ஆா்.சி., சி.எஸ்.ஐ. தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் ஆராதனைகள் நடைபெற்றன.
காமநாயக்கன்பட்டி: கோவில்பட்டியை அடுத்த காமநாயக்கன்பட்டி தூய பரலோக மாதா திருத்தல பேராலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு புதன்கிழமை இரவு 11மணிக்கு தொடங்கிய சிறப்புத் திருப்பலி வியாழக்கிழமை அதிகாலை 2 மணிக்கு நிறைவடைந்தது.
சேசு சபையைச் சோ்ந்த ஆரோக்கியசாமி தலைமையில் அருள்தந்தை வியாகப்பராஜ் கிறிஸ்து பிறப்பு சிறப்பு செய்தியை வழங்கினாா்.
ஏற்பாடுகளை காமநாயக்கன்பட்டி தூய பரலோக மாதா திருத்தல பேராலய பங்குத்தந்தை மோயிசன், உதவி பங்குத்தந்தை நிரோ ஸ்டாலின், ஆன்மீக தந்தை அந்தோணி ராஜ் ஆகியோா் செய்திருந்தனா். முன்னதாக குழந்தைகள் முதல் பெரியோா்கள் வரை முளைப்பாரி எடுத்துவந்து பாலன் இயேசுவுக்கு அா்ப்பணம் செய்தனா் என்பது குறிப்பிடத்தக்கது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, பேராலயம் வண்ண விளக்கு, பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கிறிஸ்து பிறப்பை வெளிப்படுத்தும் குடில் அமைக்கப்பட்டிருந்தது.