காரைக்கால், பிப். 8: விவசாய கூலித் தொழிலாளர்கள், அறுவடை இயந்திரம் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால், "தானே' புயல் சீற்றத்தில் இருந்து தப்பிய சம்பா நெல் பயிர்கள் தற்போது கருகும் நிலையில் உள்ளதாக காரைக்கால் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
காரைக்கால் மாவட்டத்தில் சம்பா, தாளடியாக சுமார் 5 ஆயிரம் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. அறுவடைப் பணிகள் தொடங்க இருந்த வேளையில், "தானே' புயலின் சிற்றத்தால், பயிரிடப்பட்ட 50 சதப் பயிர்கள் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. எஞ்சியவற்றில் குறிப்பிட்ட சதம் சேதமடைந்திருந்தாலும், அறுவடை செய்து தரமான நெல்லை விற்க விவசாயிகள் முனைப்பு காட்டி வருகின்றனர்.
ஆனால், அறுவடை செய்த நெல்லை அரசு நிறுவனங்கள் சார்பில் கொள்முதல் செய்ய எந்த ஏற்பாட்டையும் புதுச்சேரி அரசு செய்யாததால், விவசாயிகள் தனியாரிடம் குறைந்த விலைக்கு நெல்லை விற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இப் பகுதியில் கடும் விவசாயக் கூலித் தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளது. மேலும், வேளாண் துறை சார்பில் விவசாயிகளுக்கு வாடகைக்கு வழங்க அறுவடை இயந்திரங்கள் இல்லை என்பன உள்ளிட்ட காரணங்களால், அறுவடைப் பணியை செய்யாமல் விவசாயிகள் தவிப்புக்குள்ளாகியுள்ளனர். சில விவசாயிகள் அறுவடையின் அவசரம் கருதி, தமிழகப் பகுதிகளுக்குச் சென்று இயந்திரம் வாங்கவும், தொழிலாளர்களை அழைத்து வர முயற்சித்தும் பயனில்லை எனத் தெரிவிக்கின்றனர்.
ஆள் கூலியாக குறைந்தபட்சம் நாளொன்றுக்கு ரூ. 350 வாங்குகிறார்களாம். சில இடங்களில் ரூ. 500 வரை கேட்பதாகவும் கூறப்படுகிறது.
காரைக்கால் வேளாண் துறையில் 3 அறுவடை இயந்திரங்கள் இருந்தும், அவை பழுதாகி உள்ளன. தனியாரிடம் அதிக அளவில் இயந்திரம் இல்லாததாலும், கடுமையான கூலி உயர்வால் தொழிலாளர்களை வைத்து அறுவடை செய்ய முடியாததாலும் விவசாயிகள் பலர் நெல்லை அறுக்க முடியாமல் திணறுகின்றனர்.
இதனால், விழுதியூர், பேட்டை, நிரவி உள்ளிட்ட பல பகுதிகளில் பயிர்கள் கருகும் நிலையில் உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து காரைக்கால் பிரதேச விவசாயிகள் நலச் சங்க துணைச் செயலர் பி. தங்கராசு கூறியது:
ரூ. 500 வரை தொழிலாளர்கள் அறுவடைக் கூலி கேட்கின்றனர். அறுவடை இயந்திரமும் கிடைக்கவில்லை. ஆனால், புதுச்சேரி அரசு, காரைக்காலில் வேளாண்மையை மேம்படுத்த ஒரு சதம்கூட முயற்சி எடுக்கவில்லை.
ஒவ்வொரு ஆண்டும் தேவையான இடுபொருள்கள் காலத்தோடு கிடைக்காதது, தொழிலாளர் பற்றாக்குறை, அறுவடைக்கு இயந்திரம் இல்லாதது உள்ளிட்ட பிரச்னைகள் தொடர்வதால், ஓராண்டு சிரமத்தை சந்தித்த விவசாயிகள் மறு ஆண்டில் பயிர் செய்ய பல முறை யோசிக்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
காரைக்காலைச் சேர்ந்தவர் வேளாண்மைத் துறை அமைச்சராக இருந்தும், விவசாயிகளை இதுவரை அழைத்து பிரச்னைகளை அறிந்து நடவடிக்கை எடுக்க முற்படவில்லை. இதனால், வரும் ஆண்டுகளில், காரைக்கால் விளை நிலங்கள் தரிசாக மாறும் வாய்ப்பு உள்ளது என்றார் அவர்.
இதுகுறித்து முன்னாள் வேளாண்மைத் துறை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் கூறியது:
காலத்தோடு விவசாயிகளுக்கு இடுபொருள்கள் கிடைக்கச் செய்ய வேண்டும்.
வேளாண்மைக்குத் தேவையான சாதனங்கள் துறை சார்பில் கிடைக்கச் செய்ய வேண்டும். அறுவடை செய்த பயிர்களை அரசு சார்பில், அரசு நிர்ணயித்த விலையில் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவை முறையாக அரசு செய்தாலே, விவசாயிகள் பிரச்னையின்றி பயிர் செய்ய வாய்ப்பு உருவாகும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.